பல வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்து காலா தர்பார் அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை. ஆனால் ஜெயிலர் படம் பெரிய கம்பேக் தந்தது. இன்னொரு பாட்ஷா என்கிற அளவுக்கு படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அதனால் அதுவரை தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதித்தார். அப்போதே நெல்சனிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கான ஒப்பந்தம் போட்டு விட்டது.
ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படமும் வேட்டையன் படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற இந்த படத்தை ரஜினியின் மகளே தனக்கு பிடிக்காத ஒரு படம் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் தரப்பில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.
அதாவது மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானதால் இந்த முறை ஜெயிலர் 2 படத்தையும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு சென்டிமென்ட் ஆக திட்டமிட்டது. இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
அதனால் வருகிற ஆகஸ்ட் வரை 6 மாதங்கள் வரை ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தையும் இயக்குனர் நெல்சன் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளார். அதனால் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக வரும் ஜூன் மாதம் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் செய்யும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





