தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அர்ஜூன். பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதால் அவரை ஆக்சன் கிங் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். இராம நாராயணன் இயக்கிய நன்றி என்ற படம் மூலம் கடந்த 1980களில் நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
முதல் படத்தில் வாய் பேசாத ஒரு கேரக்டரில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு சங்கர் குரு படிச்சபுள்ள பாட்டாளி மகன் தாயம் ஒண்ணு உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். குறிப்பாக ஜெய்ஹிந்த் ஜெண்டில்மேன் முதல்வன் போன்ற படங்கள் அவரை நட்சத்திர ஹீரோவாக மாற்றியது.
நடிகராக மட்டுமின்றி ஒரு கட்டத்தில் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் அர்ஜூன் மாறினார். வேதம் ரிதம் போன்ற படங்களில் அவரது பக்குவப்பட்ட நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இப்போதும் அவர் படங்களில் வில்லன் கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் காமெடி மற்றும் குணசித்திர நடிகராக உள்ள தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனது மகள் ஐஸ்வர்யா நடித்த சீதா பயணம் என்ற படத்தை நடிகர் அர்ஜூன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.
இதற்கிடையே நடிகர் அர்ஜூன் நடித்த படங்களில் ஏழுமலை என்கிற படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு வெற்றிப் படமாகும். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகர் சிம்ரன் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கஜாலா மும்தாஜ் விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குடும்பத்துக்காக பாடுபடும் ஒரு பாசக்கார மனிதராக அர்ஜூன் சிறந்த நடிப்பை தந்திருந்தார்.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, ஏழுமலை படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளது. விரைவில் அதுகுறித்து அப்டேட் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். ஏழுமலை படத்தை டைரக்ட் செய்தது நடிகர் அர்ஜூன்தான். அதனால் அந்த படத்தின் இயக்குனர் என்ற முறையில் ஏழுமலை படம் 2ம் பாகமாக உருவாகிறது என்ற தகவலை நடிகர் அர்ஜூன் கூறியிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





