தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். நன்றி என்ற படம் மூலம் 1980களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். இப்போது 45 ஆண்டுகளில் ஏராளமான வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட நடிகர் அர்ஜூன் 62 வயதிலும் இன்னும் இளமையான லுக்கில் காணப்படுகிறார்.
நடிகர் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக தேசப்பற்று மிக்க படங்களில் அதிகமாக நடித்தவர் நடிகர் அர்ஜூன்தான். குறிப்பாக ஜெய்ஹிந்த் முதல்வன் ஜெண்டில்மேன் போன்ற பல படங்களில் அர்ஜூன் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அவரே சொந்தமாக பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா நடித்த சீதா பயணம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
நடிகர் அர்ஜூன் கடந்த சில ஆண்டுகளாக சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக மங்காத்தா லியோ மற்றும் விடாமுயற்சி போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். ரிதம் வேதம் போன்ற கேரக்டர்களில் நடித்த அவர் வில்லன் வேடங்களில் நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.
அதனால் இனிமேல் வில்லன் வேடத்தில் நடிப்பதில்லை என்று சமீபத்தில் பேசிய ஒரு நேர்காணலில் நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார். அவர் மிக விரைவில் தனது மருமகன், தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த படத்தை தயாரிக்கப் போவதும் நடிகர் அர்ஜூன்தான்.
இந்நிலையில் நடிகர் அர்ஜூன் நடித்த பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது, அர்ஜூன் பற்றி நான் சொல்லியே ஆகணும். அவர் படத்துல முதல்ல நடிக்கும் போது சம்பளம் பேசுவேன். எங்க ரெண்டு பேருக்கும் நல்லா பழக்கம் ஏற்பட்டது. அப்புறம் நான் அவர்கிட்ட சம்பளம் பேச மாட்டேன்.
அர்ஜூன் சார் படமா? ஓகே என்ன சம்பளம் இருந்தாலும் சரின்னு சொல்லிடுவேன். ஒரு படத்துல எனக்கு அதிகமா சம்பளம் கொடுத்துட்டார். நான் அவர்கிட்ட சார் எனக்கு சம்பளம் அதிகமா வந்திருக்குன்னு சொன்னேன். அதுக்கு, உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அதை எடுத்துக்கோங்க. மிச்சத்தை சின்ன நடிகர்களுக்கு கொடுத்துடுங்கன்னு அவர் சொன்னார். அப்புறம், உங்களுக்கு எப்போது பணம் வேணும்னாலும் தயங்காமல் கேளுங்கன்னு என்கிட்ட சொல்லுவார் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.





