நடிகர் சூர்யா நடித்த ஆதவன் என்ற படம் கடந்த 2009ம் ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்து இருந்தார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார்.
ஆதவன் படத்தின் கதை திரைக்கதையை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நடிகர் ரமேஷ் கண்ணா எழுதி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சரோஜாதேவி வடிவேலு ரியாஸ்கான் ரமேஷ் கண்ணா மனோபாலா பெப்ஸி விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நீதிபதி கேரக்டரில் மலையாள நடிகர் முரளி நடித்திருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் ராம் பொல்லாதவன் டும்டும்டும் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் ஆதவன் படம்தான் அவரது கடைசி படமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த பிறகு அவர் 2009ம் ஆண்டில் மறைந்து விட்டார்.
ஆதவன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மேலே பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடிகர் சூர்யா சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பார். அது குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறியதாவது, ஆதவன் படத்தின் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டே பாம் வைக்கிற மாதிரி ஒரு சீன் கிளைமாக்ஸ்சில் இருந்தது.
நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சூர்யாவே அந்த காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்தார். கீழே இருந்து கயிறு கட்டி ஃபுல் ஃபார்மில் அவரை ஹெலிகாப்டர் உயரத்துக்கு மேலே இழுத்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் இருந்த கம்பி நேராக சூர்யாவின் தலையில் இடிக்கிற மாதிரி வந்துவிட்டது.
நல்ல வேளையாக அவர் டக்கென்று தலையை அசைத்ததால் அந்த கம்பி அவர் தோள்பட்டையில் மட்டும் லேசாக உரசி விட்டு போய்விட்டது. அந்த ஒரு வினாடியில் பெரிய விபத்திலிருந்து நடிகர் சூர்யா தப்பித்தார். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் சூர்யாவுக்கு பலத்த அடிபட்டிருக்கும் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





