விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

“லியோ” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்து வருகிறார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்யின் கெரியரில் மிக பெரிய பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய்க்கு மட்டுமல்லாது லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு என்பதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும் “லியோ” LCU-க்குள் வருமா? வராதா? என்பது குறித்த கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. ஒரு வேளை “லியோ” திரைப்படம் LCU-க்குள் வந்தால் இத்திரைப்படத்தில் “கைதி”, “விக்ரம்” திரைப்படத்தின் தொடர்ச்சியாக கார்த்தி, கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இத்திரைப்படம் LCU-க்குள் வந்தால் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது 2000 டான்சர்களை வைத்து ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். இவ்வாறு ஒரு தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது “பிரேமம்” திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்ட நடிகை மடோன்னா செபாஸ்டியன் “லியோ” படத்தில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஒரு வெறித்தனமான கேங்கஸ்டர் திரைப்படமாக “லியோ” திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் மடோன்னா செபாஸ்டியன் மாதிரியான ஒரு கியூட் ஆன நடிகைக்கு “லியோ” படத்தில் எந்த விதமான ரோல் இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





