நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடித்து அதிக கவனம் பெற்றார். பிறகு புதுப்பேட்டை படிக்காதவன் பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் என பல படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார்.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் பாடகர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் வலம் வரும் தனுஷ் தமிழில் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். வுண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் பல படங்களை அவ்வப்போது தயாரிக்கவும் செய்கிறார். இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்களை தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார்.
ஆரம்பகாலத்தில் நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய படங்களில் நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக செல்வராகவனும் நடிகராக மாறிவிட்டார். அவர் ராயன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க தனது அண்ணன் செல்வராகவனை நடிகர் தனுஷ் இயக்கியது பெரிய அளவில் கவனம் பெற்றது. அந்த படத்தில் இயக்குனராக தனுஷ் அதிக பாராட்டை பெற்றாார்.
சமீபத்தில் சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடத்தி வரும் அவருக்கு சொந்தமான வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு ஏராளமான மாணவ மாணவியர் மத்தியில் நடிகர் தனுஷ் தனது கடந்த கால சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசினார்.
அந்த விழாவில் பேசிய போது நடிகர் தனுஷ் கூறியதாவது, நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பெரிய ஆசீர்வாதமாக நினைத்து அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக இரவும் பகலும் பாடுபட வேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தான். என் திரையுலக பயணத்தில் 2ம் அத்தியாயத்தை இப்போது தொடங்கியுள்ளேன். எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
என்னுடைய முதல் படம் துள்ளுவதோ இளமை இங்குதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடி வாங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்வில் சிறந்த நாட்களாக இருக்கும். மெடிடேஷன்மற்றும் மேனிபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் என்பதால் அதை கண்டிப்பாக பின்பற்றுங்கள் என்று நடிகர் தனுஷ் அறிவுரை வழங்கிப் பேசினார்.





