எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம் தனக்கான வெற்றியை அதுவாகவே தேடிக்கொள்கிறது. அந்த வகையில் சில படங்களை ரசிகர்கள் ஜெயிக்க வைத்திருக்கின்றனர். ஒரு நல்ல திரைக்களத்தில் கதையம்சத்தில் உருவான படம் என்றால் அதற்கு விளம்பரமே செய்ய தேவையில்லை. ரசிகர்களே அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்.
அப்படிதான் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. ரூ. 300 கோடி 400 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ரூ. 100 கோடி வசூலை கடப்பது பெரிய வெற்றியல்ல. ரூ. 5 கோடி ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான படங்கள், 80 கோடி 90 கோடி ரூபாய் என வசூல் சாதனை படைப்பதுதான் உண்மையான ரசிகர்கள் தந்த வெற்றியாகும்.
அந்த வரிசையில் காக்கா முட்டை லப்பர் பந்து பார்க்கிங் குடும்பஸ்தன் குட்நைட் டூரிஸ்ட் ஃபேமிலி சிறை போன்ற படங்கள் வெற்றி பெற்றன. ஏனெனில் இந்த படங்கள் ஹீரோக்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் இல்லை. கதைக்களத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன.
அதே போல் இந்த வெற்றிப் படங்கள் வரிசையில் 2026ம் ஆண்டில் முதல் வெற்றிப் படமாக ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடித்த தாய்கிழவி படம் பெரிய வரவேற்பை ஆதரவை ரசிகர்களிடம் பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்த இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் கதை என்பது வட்டிக்கு விட்டு பணம் வசூலிக்கும் அடாவடி தாய்கிழவியாக பவுனுத்தாயி ராதிகா சரத்குமார் இருக்கிறார். அவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட அவரது 3 மகன்களும் பவுனுத்தாயை தனியார் மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைக்கின்றனர். அப்போது நடக்கும் சம்பவங்களே காமெடி கலந்த கதையாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த படத்தை பொருத்த வரை பொம்பள சிவாஜி என்ற ஒரு பட்டம் ராதிகா சரத்குமாருக்கு கிடைத்துள்ளது. நடிப்பில் அந்த அளவுக்கு திறமையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த 27ம் தேதி ரிலீஸான இந்த படம் முதல் நாளிலேயே ரூ. 12.5 கோடி வசூலித்த நிலையில் இப்போது 5 நாட்களில் 29.5 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டெ ரூ. 10 கோடிதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விரைவில் ரூ. 50 கோடி வசூலை எட்டும் அளவுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.





