தெலுங்கு மொழி சினிமாவில் மூத்த நடிகராக உள்ளவர் ராஜேந்திர பிரசாத். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது மறைந்த நடிகர் காந்தாரா குறித்து பெருமையாக பேசிய நடிகர் ராஜேந்திர பிரசாத், காந்தாராவ் திரைப்படங்களில் கத்தி சண்டை போடுவதில் வல்லவர் என்று பெருமையாக பேசினார்.
மேலும் காந்தாராவின் திறமையை பார்த்து எம்ஜிஆரே பயந்து நடுங்குவார் என்றும் காந்தாராவுடன் எம்ஜிஆரை ஒப்பிட்டு விமர்சித்து பேசியிருந்தார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் யாருக்குமே பயப்படாத துணிச்சல் மிக்கவர். தைரியம் மிக்கவர். தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த போதும் கூட அச்சப்படாதவர் என்பது தமிழக மக்கள் அறிந்த உண்மை.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்த கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது, நண்பர் மற்றும் சக நடிகர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், தற்போது மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் பற்றி பேசிய பாராட்டிய காணொளி கண்டேன்.
ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். திறமையை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் நீங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியையும் மன சங்கடத்தையும் ஏற்படுத்தியது. இது எனக்கு மட்டுமல்ல இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல, உங்கள் சகாக்களே புண்பட்டு பேசி ஒலி செய்திகள் அனுப்பி உள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது.
நமக்குள் அதாவது தமிழ் தெலுங்கு சினிமாத்துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்து கொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது. நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லோரையும் என்டிஆர் ஏ என் ஆர்எஸ்வி ரங்காராவ் சாவித்திரி சாரதாம்மா வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம். எம்ஜிஆர் அவர்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல. தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை.
என்டி ராமராவ் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் எம்ஜிஆர் இருந்திருக்கிறார். நான் விஷயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, ஒரு சினிமாகாரனாக உங்களிடம் இருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அந்த மன்னிப்பு வரவேண்டும். எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர் என்று நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் நாசர் குறிப்பிட்டுள்ளார்.





