வருகிற சட்டசபை தேர்தலில் தவெக கட்சிக்கும் திமுக கட்சிக்கும் இடையேதான் போட்டியே என்று நடிகர் விஜய் தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறார். அத்துடன் திமுக அரசு குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் விஜய் தொடர்ந்து கடுமையாக மேடைகளில் விமர்சித்து வருகிறார். அவ்வப்போது தமிழக அரசியல் நிலைப்பாடு ஆளுங்கட்சி செயல்பாடுகள் குறித்தும் எக்ஸ் பதிவில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பதிவில் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன.
ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்? பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை.
இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல் தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அந்த பதிவில் தவெக தலைவர் நடிகர் விஜய் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





