நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியானது. அதன்பிறகு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்த கருப்பு படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. கருப்பு படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து நடிகர் சூர்யா இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஆவேசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஜித்து மாதவன். சூர்யா 47 படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த சூழலில் சூர்யா 47 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க நடிகர் சிம்புவிடம் இயக்குனர் ஜித்து மாதவன் கேட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே திட்டமிட்டு இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை இயக்குனர் ஜித்து மாதவன் எழுதியதாக சிம்புவிடம் கூறியிருக்கிறார்.
படம் முழுவதும் சிம்புவின் கேரக்டர் குறித்து மற்றவர்கள் பேசிக்கொண்டே வரும் நிலையில், இறுதி காட்சியில் சிம்பு படத்தில் தோன்றுவது போல்தான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு உற்சாகமான சிம்பு இந்த படத்தில் நடிக்க உடனே ஓகே சொல்லி விட்டார்.
அதன்பிறகு சூர்யா 47 படத்தின் 2ம் பாகத்தில் படம் முழுவதும் சூர்யாவும் சிம்புவும் இணைந்து நடிக்கும்படி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கவும் சிம்பு ஓகே சொன்ன நிலையில், இயக்குனர் ஜித்து மாதவன் அந்த படத்தின் ஸ்கிரிப்டை ரெடி செய்துவிட்டு உங்களுக்கு தருகிறேன். முழுவதுமாக படித்து பாருங்கள். பிறகு உங்களுக்கு சம்மதம் என்றால் அதில் நடியுங்கள். கட்டாயம் எதுவும் இல்லை என்றும் பக்குவமாக கூறியிருக்கிறார்.
இப்படி தன் மீது அபிமானம் வைத்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் கதை எழுதியிருப்பதால் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதில் சிம்புவும் ஆர்வமாக உள்ளார். அதனால் மிக விரைவில் அந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக சூர்யா சிம்பு ஜோடி இந்த படத்தில் இணைவதும் குறிப்பிடத்தக்கது.





