தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ரவி மோகன். ஆரம்பத்தில் ஜெயம் ரவி என அழைக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக ரவி மோகன் நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தன. அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என எந்த படமும் ஹிட் ஆகவில்லை.
இதற்கு இடையே நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்காக குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். அதுவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள நடிகர் ரவிமோகன் தற்போது காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். மேலும் படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ரவி மோகன் இப்போது வில்லனாக நடிக்கவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
அந்த வகையில் கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தில் ரவிமோகன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. பராசக்தி படத்தை தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் ரவிமோகன் நடித்திருக்கிறார். அரசியல் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இதற்கிடையே நடிகர் ரவி மோகன் தஞ்சாவூரில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது தோழி கெனிஷாவும் அவருடன் இருந்தார். அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் ரவிமோகனிடம் டயலாக் ஏதாவது பேசுங்கள் என்று அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வமாக கேட்டனர். அதற்கு ரவிமோகன், பொன்னியன் செல்வன் படத்தில் வரும் டயலாக்கை சொல்கிறேன் என்று கூறி மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது என்றார்.
அதேபோல் கராத்தே பாபு படத்தில் வரும் ஒரு டயலாக்கையும் அவர் பேசினார். நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன். நான் அரசியலையே தொழிலாக பண்றவன் என்றும் கூறினார். தற்போது தேர்தல் பரபரப்பு சூடு கிளப்பி வரும் நிலையில் நடிகர் ரவிமோகனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது என்று நடிகர் விஜய் குறித்து தான் ரவிமோகன் மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் என்று ஒரு தரப்பினர் பேசுவதால் இது தற்போது இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது.





