நடிகர் பார்த்திபன் உஸ்தாத் பகத்சிங் என்ற தெலுங்கு படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், நான் நாயுடு பையன். ஆனால் தெலுங்கு தெரியாது. தமிழில்தான் பேசுவேன் என்று கூறியிருந்தார்.
தனது படங்களில் ஜாதி மதம் குறித்து புரட்சிக்கரமான கருத்துகளை சொல்லும் நடிகர் இயக்குனர் பார்த்திபன் இப்படி தனது ஜாதியை பற்றி பெருமையாக பேசியது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பலரும் பார்த்திபனின் இந்த செயலுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இதுகுறித்து ஏற்கனவே மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்த இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இப்போது தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, சத்தியமாக சொல்கிறேன். எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை. நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது. இவன் உட்பட பல படங்களில், இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.
அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்.
என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.





