தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். இந்த ஆண்டில் அவர் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியாகின. இதில் விடாமுயற்சி படம் தோல்வியடைந்தாலும் குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. எனினும் இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 70 கோடி நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் துவக்கத்தில் இருந்தே அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் நடிகர் அஜீத்குமார் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் கலந்துக்கொண்டு வருகிறார். துபாயில் ஸ்பெயின் பிரிட்டன் இத்தாலி பெல்ஜியம் என பல்வேறு நாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்று வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருக்கிறார்.
கடந்த 9 மாதங்களாக நடந்த கார் ரேஸில் பல போட்டிகளில் நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸிங் அணி வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த மாதத்துடன் கார் ரேஸிங் முடிவடையும் நிலையில் நடிகர் அஜீத்குமார் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள தனது ஏகே 64 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை சினிமாவில் நடிப்பதை காட்டிலும் அவர் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார். மோட்டார் பைக் ஓட்டுதல் கார் ரேஸ் மற்றும் ரைபிள் சுடுதல் போன்ற போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மோட்டார் பைக் ரேஸ்களில் பலமுறை அஜீத்குமார் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்த வரும் கார் ரேஸில் ஆர்வமாக பங்கேற்றுள்ள நடிகர் அஜீத்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றில் பங்கேற்ற நேர்காணலில் கூறியதாவது, கார் ரேஸ்களில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு சினிமா வெப் தொடர்கள் பார்க்க கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே ஓய்வு கிடைக்கிறது.
ஆனால் அந்த நேரத்தில் கூட நான் தூங்கி விடுகிறேன். முக்கியமாக எனக்கு தற்போது தூங்குவது தான் ஒரு பிரச்னையாக உள்ளது. அப்படியே தூங்கினாலும் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும்தான் தூங்குகிறேன். அந்த அளவுக்கு தூக்கமும் எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது என்று அந்த நேர்காணலில் நடிகர் அஜீத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தூக்கம் சில மணி நேரமாக குறைந்து விடுகிறது. அந்த பிரச்னை இப்போது நடிகர் அஜீத்குமாருக்கும் ஏற்பட்டுள்ளது.





