நடிகர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் களத்தில் எதிர்த்து நிற்கின்றன. தவெக கட்சியும் நாம் தமிழர் கட்சியும் தனித்து களத்தில் நிற்கின்றன. நான்குமுனை போட்டி இந்த முறை நடக்கிறது.
இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நடிகர் விஜய் தரையில் அமர்ந்து வழிபாடு நடத்தி இஸ்லாமிய மக்கள் மற்றும் தொண்டர்களுடன் நோன்பு கஞ்சி அருந்தினார். அதன்பிறகு விஜய் அங்கு பேசியதாவது, நான் அரசியலுக்கு வந்த பிறகு பலவிதமான வதந்திகள் சர்ச்சைகள் பரவியது. அந்த டீம் இந்த டீம் என பல சர்ச்சைகள் எழுந்தன.
அதன் பிறகுதான் இது மக்கள் அணி என்று தெரிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுடைய திட்டம் நடக்காமல் போனதால் கடைசியில் இந்த விஜயை என்னதான் செய்வது என நினைத்து தான் இந்த கூட்டணி, அந்த கூட்டணியில் சேரப் போகிறார் என பொய்யான ஒரு பிரச்சாரத்தை இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை எல்லாம் கேட்டு நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்து இருப்பீர்கள். இந்த இடத்தில் நான் ஓபனாக தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். நாம் எப்போதுமே மதச்சார்பற்ற கொள்கை என்பதில் மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சி என்கிற நிலைப்பாட்டில் எப்போதுமே நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நம் தலைமையில் தான் ஆட்சி என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
என்னுடைய முதல் மாநாட்டில் நான் சொன்னது போல அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்த விதமான சமரசமும் வைத்துக்கொள்ள மாட்டேன். இதனால் யார் என்ன அவதூறுகள் பரப்பினாலும் தயவு செய்து அதை நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த டார்கெட்டை நம்மால் நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.





