இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படம் பரத்துக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. அடுத்து எம் மகன் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படங்களும் பரத்துக்கு நல்ல படங்களாக அமைந்தன.
அதன்பிறகு பரத் நடித்த வெயில் சேவல் கூடல் நகர் நேபாளி கண்டேன் காதலை என பல படங்கள் வெளியான நிலையில் அவரால் முன்னணி நடிகராக முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை. எனினும் நல்ல நடிகராக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டவர். காளிதாஸ் படத்தின் 2ம் பகுதி உருவான காளிதாஸ் 2 படத்திலும் பரத் நடித்திருக்கிறார்.
சென்னையில் நேற்று நடந்த காளிதாஸ் 2 பட விழாவில் நடிகர் பரத் பேசியதாவது, என்னுடைய கேரியரில் நிறைய புதுமுக இயக்குனர்களோடு நான் வேலை பார்த்திருக்கிறேன். என்னுடைய சினிமா பயணத்திலிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் என்னவென்றால் ஒரு நல்ல இயக்குனர் கிடைத்தால் உங்கள் பயணம் துவங்கிவிடும். நல்ல இயக்குனர் கிடைக்கவில்லை என்றால் பஞ்சாயத்து தான்.
சினிமாவில் எல்லா ஹீரோக்களுக்கும் வெற்றி தோல்வி என்பது இருக்கும். தொடர்ந்து மூன்று வெற்றி படம் கொடுத்ததற்கு பிறகு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். திடீர் என்று தோல்வி படம் கொடுத்துவிட்டால் அதை சார்ந்து தான் மார்க்கெட் இருக்கும். அப்போது அவருக்கு மார்க்கெட் இல்லைன்னு சொல்லிடுவாங்க.
அப்படியான சூழல் இருந்த போது எனக்கு கிடைத்த படம்தான் காளிதாஸ். அது எனக்கு கம்பேக் படமாக இருந்துச்சு. நான் சினிமாவை விட்டு எங்கேயும் போகலே. இதே சினிமாவில் இருக்கணும்ன்னு தான் அடிச்சு புடிச்சு வந்துட்டு இருக்கேன். உங்களுடைய கடைசி படத்தை வைத்து தான் சினிமாவில் பிசினஸ் இருக்கும்.
காளிதாஸ் 2 படத்தை சின்னதாக தொடங்கினோம். ஆனால் இன்னைக்கு இது பெரிய படமாக வந்திருக்கு. நான் நிறைய ஆடியோ லான்ச் ரீல்ஸ்ல தான் பார்க்கிறேன். நானும் படங்கள் பண்ணினேன். ஆனால் என்னுடைய படங்களுக்கு பெரிய அளவுக்கு ஆடியோ லாஞ்ச் நடந்தது இல்லை. இதை நான் சிம்பதிக்காக சொல்லவில்லை. இதுதான் ரியாலிட்டி என்று நடிகர் பரத் அந்த விழாவில் ஆதங்கமாக பேசியிருக்கிறார்.





