சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் மிக மோசமான உருவ கேலிக்கு ஆளானவர் தான் யோகிபாபு. படத்திலேயே மற்ற கேரக்டர்கள் அவரை உருவ கேலி செய்வது போன்ற வசனங்கள் வந்தன. எனினும் யோகிபாபுவுக்கு அதுவே பிளஸ் பாயிண்டாக அமைந்து இன்று நட்சத்திர காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில் நடித்த போது லொள்ளு சபா பாபு என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். யோகி என்ற படத்தில் காமெடி நடிகராக அவர் நடித்த பிறகு தான் யோகிபாபு என பெயர் மாறியது. இதுவரை 300 படங்களில் நடித்தவர் என்ற பெருமையும் யோகிபாபுவுக்கு கிடைத்துள்ளது.
இதில் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் சில காட்சிகளில் தான் யோகிபாபு வந்து சென்றார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் யோகிபாபு நடித்த பெரும்பாலான படங்களில் அவர் வந்து சென்றது ஒரு சில காட்சிகளில்தான். ஆனால் காக்கா முட்டை ஜெயிலர் மாவீரன் மண்டேலா கூர்க்கா தர்மபிரபு போன்ற படங்கள் அவரது பெயரை சொல்லியது.
இந்நிலையில் தனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள நல்ல கேரக்டர்களில் இனிமேல் நடிக்க வேண்டும் என்ற முக்கிய முடிவுக்கு யோகிபாபு வந்திருக்கிறார். அதனால் முன்னணி இயக்குனர்களை அழைத்து உங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுங்கள் என்றும் சமீபமாக கேட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறனிடம் பேசிய யோகிபாபு, அரசன் படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் கொடுங்கள். உங்கள் படத்தில் நடிப்பது என் லட்சியம் என்று கூறியிருக்கிறார். யோகிபாபுவே நேரடியாக கேட்டதால் வெற்றிமாறனும் அவரை நேரில் வரச் சொல்லி ஒரு கேரக்டரை கொடுத்து விட்டார்.
ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால் ஏற்கனவே மற்ற சில படங்களில் கால்ஷீட் தந்த நாட்களில் தான் வெற்றிமாறன் அரசன் படத்தில் நடிக்க யோகிபாபுவுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். அதனால் பகல் நேரத்தில் மற்ற படங்களிலும் தினமும் இரவு 2 மணி வரை அரசன் படத்திலும் யோகிபாபு நடித்து எப்படியோ சமாளித்து வருவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





