நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக தமிழக அரசியல் களத்தில் வலுவான ஒரு அரசியல்வாதியாக நிற்கிறார். திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய நடிகர் விஜய், 2026ல் நான்தான் முதல்வர் என்றும் உறுதியாக பேசி வருகிறார். மக்கள் ஆதரவும் அவருக்கு அமோக இருந்து வருகிறது.
இந்நிலையில் டிஎன் 2026 என்ற திரைப்படம் வருகிற 17ம் தேதி வெளியாக உள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்த படத்தை நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்கி உள்ளார். இவர் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நட்டி நடராஜ் ஹீரோவாகவும் எம்எஸ் பாஸ்கர் தம்பி ராமையா போன்றவர்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் இதில் நடிகர் விஜயை மையப்படுத்தி இந்த அரசியல் படம் எடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக விஜயை தரக்குறைவாக விமர்சிக்கும் காட்சிகளும் வசனங்களும் இந்த படத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் விஜய் கெட்டப்பில் நடிகர் நட்டி நடித்திருப்பது தளபதி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திரைப்பட ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜ், நடிகர் விஜய் நடித்த யூத் மற்றும் புலி ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்திருக்கிறார். விஜயுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர். மேலும் மிளகா முத்துக்கு முத்தாக சதுரங்க வேட்டை கர்ணன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.
இந்நிலையில் நடிகர் விஜய் போன்ற சிகை அலங்காரம் நரைத்த தாடி மீசை விஜய் அணியும் அதே உடை என்ற தோற்றத்தில் இந்த படத்தில் நட்டி நடித்திருக்கிறார். விஜயை விமர்சிக்கும் ஒரு கேரக்டரில் விஜயின் நண்பரான நட்டி நடித்திருப்பது தளபதி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை வருத்தத்தை தந்திருக்கிறது.
இதுகுறித்து தவெக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தளபதி ரசிகர்களும் தவெக தொண்டர்களும் டிஎன் 2026 படத்தை யாருமே பார்க்க கூடாது என்றும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். பீடா விற்க வடநாட்டில் இருந்து வரும் ஒருவர் சினிமா நடிகராகி பிறகு அரசியல்வாதியாகி முதல்வராக நினைப்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் தெரிய வந்துள்ளது.





