தமிழ் சினிமாவில் பல படங்களில் அம்மா அக்கா அண்ணி கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி வைத்யநாதன். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் 2 ஆண்டுகளாக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த கட்சியை விட்டு வெளியேறி விட்டார். அவ்வப்போது தனது அரசியல் பிரச்னைகள், சமூகம் சார்ந்த தனது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகை வினோதினி வைத்யநாதன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரியான நபர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் சிலர் நான் எனது கேரியரின் உச்சத்தை விட்டு விட்டு வந்தேன். எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு நான் உங்களுக்காக வருகிறேன் என்றெல்லாம் சொல்லி மக்கள் மத்தியில் ஓட்டு கேட்கிறார்கள்.
ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அவனது சொந்த விருப்பம் இல்லாமல் எப்போதும் செய்ய மாட்டான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் தானே அரசியல் ஈடுபடுகிறீர்கள்? அப்புறம் ஏன் உச்சத்தை விட்டு விட்டு வந்தேன் என்று உங்களை நீங்களே பரிதாபமானவராக காட்டிக் கொள்கிறீர்கள்? உங்களை யார் அப்படி விட்டு விட்டு வரச் சொன்னது?
நாங்கள் கேட்டோமா, நாங்கள் அழைத்தோமா, உங்களுக்கு ஏதாவது வலி இருந்தால் அது தொடர்பாக டாக்டரை போய் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். நமது நாட்டில் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சந்திக்காத நெருக்கடி, வலியையா நீங்கள் சந்தித்து விட்டீர்கள்?
நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அவர்களால் அது கூட முடியாது. அப்படி இருக்கும்போது உங்களை நீங்களே ஏன் பரிதாபத்திற்குரிய மனிதராக காட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் ஓட்டு கேட்கிறீர்கள்? நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் யாரும் அழவில்லை. சும்மா சிம்பதி உருவாக்கிக் கொண்டு இருக்காதீர்கள்.
அரசியல் என்பது உங்கள் விருப்பம். இதில் உங்களுக்கு ஆதாயமும் இருக்கிறது. பதவி புகழ் என்று கிடைக்கப் போகிறது. அப்படி இருக்கும்போது எதற்காக கேரியரின் உச்சத்தை விட்டு விட்டு வந்தேன், அதை விட்டுவிட்டு வந்தேன் இதை விட்டுவிட்டு வந்தேன் என்று தினமும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதை பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. மக்கள் மத்தியில் நல்ல விஷயத்தை பரப்ப முயற்சி செய்யுங்கள். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள் என்று வினோதினி வைத்யநாதன் அந்த வீடியோவில் நடிகர் விஜய் குறித்து விமர்சித்து இருக்கிறார்.





