நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களாக நடக்காமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி குறுக்கீடு காரணமாவும், தயாரிப்பாளர் சங்கம் எடுத்த நடவடிக்கையாலும் இந்த படப்பிடிப்பு தற்காலிகமாக தடைபட்டு அப்படியே நிற்கிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்பு தன்னிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை பல ஆண்டுகளாக தராத நிலையில் அந்த தொகையை வட்டி மற்றும் இதர செலவினங்களுடன் சேர்ந்து ரூ. 12.5 கோடியாக வசூலித்து தர வேண்டும் என்று புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று சிம்புவின் அப்பா இயக்குனர் டி ராஜேந்தர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் வெந்து தணிந்தது காடு படம் குறித்த கோர்ட் வழக்கில், சிம்புவுக்கு தந்த அட்வானஸ் பணம் சிம்புவுக்கே சொந்தம் என தங்களுக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் ஐசரி கணேஷ் வேண்டும் என்றே பிரச்னை செய்கிறார் என்று கூறியிருந்தார்.
இப்படி ஒரு சூழலில் அரசன் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா, இந்த பிரச்னைகள் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில் அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கடும் குழப்பத்தில் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். 2 ஷெட்யூட் படப்பிடிப்பு மட்டுமே நடந்துள்ளது.
எப்படியும் இந்த விவகாரம் கூடிய விரைவில் முடிவுக்கு வராது என்ற நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் கமிட் ஆன மற்ற நடிகர்கள் நடிகைகள் கால்ஷீட்டும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தனது படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்த இப்போது யூத் படம் மூலம் நாயகனாக இயக்குனராக பெரிய வெற்றியை தந்திருக்கிற கென் கருணாஸை அரசன் படத்தின் ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார்.
அதனால் அரசன் படத்தில் சிம்பு கேரக்டரில் நடிகர் கென் கருணாஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சிம்பு கேரக்டரில் கென் கருணாஸ் நடிப்பது சாத்தியமா, சரியாக வருமா என்றால் அதற்கேப திரைக்கதையில் காட்சியமைப்பில் சில மாற்றங்கள் திருத்தங்களை செய்யவும் வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார் என்கின்றனர். இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.





