சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. படம் வெளியாகி 13 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் ரூ.500 கோடிகள் வசூலை நெருங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“ஜெயிலர்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “ரஜினி தான்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை ஜெயிலர் வெற்றியின் மூலம் நிரூபித்துவிட்டார்” என்று ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.
எனினும் விஜய் ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுப்பதாக எண்ணி, “லியோ திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும்” என கூறி வருகின்றனர். இவ்வாறு இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி வருகிறது.
இந்த நிலையில் இணையத்தில் சமீப நாட்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது ரஜினிகாந்தின் “பாட்ஷா” திரைப்படத்தின் கதைதான் “லியோ” படத்தின் கதையும் என்று கூறுகின்றனர். “பாட்ஷா” திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதலில் மும்பை டான் ஆக இருப்பார். அதன் பின் அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று சென்னையில் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவராக தனது குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தாருக்கு பிரச்சனை வர மீண்டும் பாட்ஷாவாக உருவெடுப்பார்.

இதே போல் “லியோ” படத்திலும் விஜய் ஒரு கேங்கஸ்டராக இருந்து அதன் பின் வேறு வாழ்க்கை வாழ வேண்டும் என குடும்பத்துடன் சாதாரண மனிதராக வாழ்ந்து வருகிறார். அவரை வில்லன்கள் துரத்த மீண்டும் கேங்க்ஸ்டராக உருவெடுக்கிறார். இதுதான் “லியோ” படத்தின் கதை என கூறப்படுகிறது. இதனால் இரண்டு நடிகர்களுக்கும் இடையேயான வாக்குவாதம் இன்னும் வீரியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





