தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை கெளதமி. நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு சரத்குமார் ராம்கி ராமராஜன் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். குரு சிஷ்யன் குருதிப்புனல் தர்மதுரை பணக்காரன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்த கெளதமி ஒருமுறை புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த கெளதமி, நடிகர் கமலுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் பல ஆண்டுகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு கமல்ஹாசனை விட்டு பிரிந்த கௌதமி ஆரம்பத்தில் பாஜக கட்சியில் இருந்தார். பிறகு அதிமுக கட்சிக்கு மாறிட்டார். இப்போது சட்டசபை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் நடிகை கௌதமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜயும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் அறிவிக்கும் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரங்கள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் போலீசார் அனுமதி கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து நடிகை கௌதமி மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை கௌதமி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது, சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி மக்களால் தான் ஒருவர் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியும். அப்படி இருக்கும்போது அந்த மக்களோடு மக்களாக இருப்பது தான் சரி.
சினிமாவில் இருப்பதால்தான் பேரும் புகழும் கிடைத்துள்ளது என்றால் அது இந்த மக்களால் தான் கிடைத்தது. அப்படி இருக்கும்போது அந்த மக்களை நேரடியாக சந்திப்பதுதான் மரியாதையாக இருக்கும். மக்களை சந்திக்கவில்லை என்றால் அவருக்கு மக்கள் மீது மதிப்பில்லை மரியாதை இல்லை என்று தானே அர்த்தம் என்று நடிகை கௌதமி பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





