தமிழ் சினிமாவில் மூத்த கலைஞராக வலம் வந்தவர் நடிகர் ராஜேஷ். கடந்த 47 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நிறைய நாடகங்களில் நடித்துள்ள ராஜேஷ், கணீர் என குரல் வளம் மிக்கவராக இருந்ததால் பல நடிகர்களுக்கு திரைக்கு பின்னால் பின்னணி குரலும் பேசியிருக்கிறார். எந்தவிதமான நடிப்பிலும் திறமையான ஒரு கலைஞராக தன்னை வெளிப்படுத்தியவர்.
சென்னை ராமாவரத்தில் தனது வீட்டில் இருந்த நடிகர் ராஜேஷ், இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர். சமீபகாலமாக ஆன்மீகம் மருத்துவம் ஜோதிடம் சார்ந்த யூடியூப் சேனலில் பல்வேறு கருத்துகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ராஜேஷின் திடீர் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் ராஜேஷ் மறைவுக்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, என்னுடைய நெருங்கிய நண்பர் நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த மனவேதனையை தருகிறது. அருமையான மனிதர். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்கள் என்று ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்
நடிகர் கமல்ஹாசன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததை சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ராஜேஷ் என்ற மனிதரின் பெளதிக உடலுக்கு மூன்று மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் ஒரு முற்போக்கு சிந்தனையாளன் ஓர் எழுத்தாளன் என்ற மூன்று இழப்புகள் ஒரே நேரத்தில் நேர்ந்து விட்டன. கலை உலகம் அரசியல் உலகம் அறிவுலகம் குறித்த தீர்க்கமான சிந்தனையாளர் திடீரென்று மறைந்து விட்டார்.
என் அன்னையின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க 10 நாட்களுக்கு முன்பு வந்து சென்றவருக்கு இன்று நானே இரங்கல் செய்தி சொல்வது சுமக்க முடியாத துக்கமாகும். இயற்கை மரணம் எனினும் இயல்பாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது உயிர் கலையமைதி கொள்ளட்டும். ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் இரங்கல்பா எழுதியிருக்கிறார்.





