நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவரான பிறகு விஜயின் அப்பா தான் எஸ்ஏ சந்திரசேகர் என்று சொல்லும் அளவுக்கு விஜய் இந்திய அளவில் அரசியலில் கவனம் பெற்ற ஒரு தலைவராக மாறியிருக்கிறார்.
நடிகர் விஜய் இப்போது நீலாங்கரை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதுதவிர பனையூரில் அவரது பங்களா உள்ளது. மேலும் சில இடங்களில் விஜய்க்கு சொந்தமான வீடுகள் இருக்கின்றன. ஒரு வீட்டில் அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் வசித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சிறுவனாக இருந்து வளர்ந்த போது சாலிகிராமம் பகுதியில் உள்ள வீட்டில்தான் வளர்ந்தார். அப்போது எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா சந்திரசேகர் இருந்த அந்த வீட்டில் பல படப்பிடிப்புகள் நடந்துள்ளன. சாலிகிராமம் வீட்டில் விஜய் ரூமில் சத்யராஜ் ஆனந்தராஜ் விஜயகாந்த் போன்ற பல நடிகர்கள் தங்கி ஓய்வெடுத்து ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சம்பவங்கள் நிறைய உண்டு.
அந்த வீட்டின் ஒரு பகுதியை பல ஆண்டுகளாக எஸ்ஏ சந்திரசேகர் தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்த நிலையில் வீட்டின் மற்றொரு பகுதியை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் அவரும் அந்த ஸ்டுடியோவை காலி செய்துவிட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் விஜய் வளர்ந்த அந்த வீட்டை முழுமையாக இடித்துவிட்டு ஒரு பெரிய அபார்ட்மென்ட் கட்டும் முடிவுக்கு எஸ்ஏ சந்திரசேகர் ஏற்கனவே வந்துவிட்டார். இன்னும் சில நாட்களில் சாலிகிராமம் வீட்டை இடிக்கும் பணிகள் துவங்க உள்ளன. அதற்கான ஏற்பாடுகளாக தகர செட்டுகள் வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே பல ஆண்டுகளாக அந்த வீட்டில் எஸ்ஏ சந்திரசேகர் ஏற்பாட்டில் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. 200 பேர் வரை அங்கு வந்து அன்னதானம் சாப்பிட்டு பசியாறினர். இப்போது வீடு இடிக்கப்படுவதால் அன்னதானம் கிடைக்க இனி வாய்ப்பில்லை. விஜய் வளர்ந்த வீடு இடிக்கப்படுவது மட்டுமின்றி அன்னதானமும் இனி இல்லை என்கிற ஏமாற்றம் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கவலையை தந்துள்ளது.





