ஆரம்பத்தில் ரேடியோஜாக்கியாக தனது பயணத்தை துவங்கியவர் பாலாஜி. அதுவே அவரை ஆர்ஜே பாலாஜி என்று அடையாளப்படுத்தியது. பிறகு ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளராக பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. மூச்சு விடாமல் நான் ஸ்டாப் ஆக காமெடியாக பேசி மக்களின் மனங்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் ஆர்ஜே பாலாஜியை தேடி வந்தன. கவலை வேண்டாம் தேவி நானும் ரௌடிதான் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோலில் நடித்த அவர் பிறகு எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சிங்கப்பூர் சலூன் சொர்க்கவாசல் என பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இப்போது நடிகர் சூர்யா நடித்த கருப்பு என்ற படத்தையும் அவர் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும் இந்த படத்தில் வில்லனாகவும் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். ஹீரோ டைரக்டர் என சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் தனது கமெண்ட்ரியை ஆர்ஜே பாலாஜி இந்த சீசனிலும் தொடர்கிறார்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இந்த படம் தெலுங்கில் உருவாகி பிறகு தமிழ் இந்தி கன்னடம் மலையாளம் என பான் இந்தியா படமாக மாறி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தனக்கு தேடி வந்த வாய்ப்பு குறித்து ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கு தமிழில் கவிஞர் மதன் கார்க்கி தான் வசனம் எழுதியிருந்தார். அப்போது மதன் கார்க்கி என்னை போனில் அழைத்து பேசினார். படத்தின் ராணா மகன் கேரக்டருக்கு நீங்கள்தான் பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி கூறியதாக தெரிவித்தார். அதைக் கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்து விட்டேன்.
ஆனால் 2 நாள் கழித்து போன் செய்த மதன் கார்க்கி, உங்கள் குரல் வேண்டாம் என்று ராஜமௌலி கூறிவிட்டார். உங்கள் குரல் ரொம்பவும் பிரபலம். இது ஆர்ஜே பாலாஜி குரல் என படம் பார்க்கும் ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அது படத்தில் கவனச்சிதறலாக இருக்கும் என்று ராஜமெளலி கூறிவிட்டார் என்று தெரிவித்தார். இது ஏமாற்றமாக எனக்கு இருந்தாலும் அந்த லாஜிக் சரியான ஒன்றுதான் என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.





