தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தார். குறிப்பாக சிம்ரன் நடனமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதலில் சந்திரமுகி படத்தில் சிம்ரன்தான் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் இல்லாததால் ஜோதிகா சந்திரமுகியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த வாலி படத்தில் சிம்ரன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிரியமானவளே துள்ளாத மனமும் துள்ளும் ஏழுமலை பம்மல் கே சம்பந்தம் பேட்ட அவள் வருவாளா விஐபி கண்ணுபடப் போகுதய்யா என பல வெற்றிப் படங்களில் சிம்ரன் நடித்திருந்தார்.
சமீபத்தில் அந்தகன் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களிலும் சிம்ரன் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்த சிம்ரன் பாலிவுட் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இந்தியில் அவர் நடிக்க நிறைய வாய்ப்பு இருந்தும் அவர் அதில் போதிய ஆர்வம் காட்டாமல் தவிர்த்து விட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து நடிகை சிம்ரன் கூறியதாவது, பாலிவுட்டில் உள்ள சிலர் தென்னிந்திய நடிகர்களின் சாதனைகளையும் அவர்களின் பாரம்பரியத்தையும் மதிப்பதே இல்லை. அது என்னை மிகவும் பாதித்தது. நான் என் வாழ்க்கையின் பெரும் பகுதியை சினிமாவுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். அப்படி இருந்தும் அடிப்படை மரியாதை கூட கிடைக்கவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?.
சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கும் வசதி பயண ஏற்பாடுகள் என்னுடன் வரும் உதவியாளர்கள் எண்ணிக்கை போன்ற விஷயங்களிலும் கூட தேவையற்ற கட்டுப்பாடுகள் விதித்தனர். தங்குகிற ஓட்டல் முதல் விமான டிக்கெட் வரை பேரம் பேசும் சூழல் இருந்தது. அது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது.
இதுபோன்ற பல கசப்பான அனுபவங்களால் பாலிவுட்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு உருவாகவில்லை. அதனால்தான் பாலிவுட்டில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்று நடிகை சிம்ரன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஏற்கனவே இதுபோன்ற கருத்துகளை நடிகை காஜல் அகர்வால் போன்ற சில நடிகைகளும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





