தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். காதல் கவர்ச்சி குடும்பம் காமெடி என்ற ஜானரில் பொழுதுபோக்கான படங்களை தருவதில் சுந்தர் சி கெட்டிக்காரராக இருக்கிறார். நிச்சயமாக அவரது படம் பிளாப் ஆகாது என்ற நம்பிக்கையை தருபவர்.
ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து விஷால் நடிக்கும் புருஷன் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். பல நட்சத்திர ஹீரோக்களை இயக்கிய சுந்தர் சி, நடிகர் விஜய் படத்தை மட்டும் இயக்கவே இல்லை.
இதுபற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, காதலுக்கு மரியாதை படம் வந்த சில மாதங்களுக்கு பிறகு விஜய்க்கு கதை சொல்லும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது. சாலிகிராமத்தில் என் வீட்டுக்கு சில தெருக்கள் தள்ளி தான் அவரது வீடு இருந்தது. அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை.
நான் வீட்டுக்கு சென்று கதை சொன்னேன். ஆனால் மற்ற இயக்குனர்கள் போல எனக்கு படத்தில் வரும் முழுக்கதையும் சொல்ல தெரியாது. படத்தின் கதையை 5 நிமிடத்தில் மொத்தமாக சொல்லி விடுவேன். ஆனால் விஜய் விஜயகாந்த் போன்றவர்கள் முழு கதையையும் கேட்டுதான் படம் பண்ணுவார்கள்.
அதனால் 5 நிமிடங்களில் நான் சொன்ன கதையை கேட்டுவிட்டார். ஆனால் கதை பிடித்ததா, இல்லையா என்று எதுவும் சொல்லாமல் அப்பாவிடம் பேசுங்கள் என்றார். அன்று மாலையே எஸ்ஏ சந்திரசேகர் என்னை போனில் அழைத்தார். அவரை நேரில் சந்தித்து பேசினேன்.
அப்போது எஸ்ஏசி என்னிடம், விஜய்க்கு நீங்கள் சொன்ன கதை புரியவில்லை. ஆனாலும் உங்களுடன் சேர்ந்து அவர் படம் பண்ண விரும்புகிறார் என்று சொன்னார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பண்ண முடியவில்லை. பிறகு அதே கதையை அஜீத்தை வைத்து பண்ணினேன். அதுதான் உன்னைத்தேடி படம் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.





