பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ பிரகாஷ்ராஜ் பாபி தியோல் நரேன் கௌதம் மேனன் பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத இழுபுறியால் அந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகவில்லை. அதன் பிறகும் 5 மாதங்கள் கடந்தும் இதுவரை ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் நீடிக்கிறது.
மேலும் எப்போது ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என்பது படத்தயாரிப்பாளர் உள்ளிட்ட யாருக்குமே தெரியவில்லை. படத்தின் நாயகன் நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். இருப்பினும் இந்த பிரச்சனைக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை .விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் வருகிற ஜூலை 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மகன் இயக்கிய முதல் படம் சிக்மா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் எப்போது திரைக்கு வரும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சென்சார் சான்றிதழ் இன்னும் கைக்கு வராத நிலையில் படக்குழு தரப்பில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதற்கிடையே படத்தின் இயக்குனர் எச் வினோத் செல்லும் இடங்களில் எல்லாம் அவரிடம் ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்து தொடர்ந்து ரசிகர்களும் செய்தியாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனரைச் வினோத்திடம் ஜனநாயகம் படம் ரிலீஸ் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, ஜனநாயகன் படம் ரிலீஸ் என்பது என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும் அதை போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எச் வினோத் கடுப்பாக கூறியிருக்கிறார்.





