தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அதன் தலைவர் நடிகர் விஜய் குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருபவர் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் தனது முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, அரசியல் 2026 – 1 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நான் எழுதும் முதல் அரசியல் கருத்து. ஒரு மாதம் கழித்து பேச எழுத தீர்மானித்து இருந்தேன்.
நான் எதிர்பார்க்காத எனக்கு ஒவ்வாத முடிவுகள் என்பதால் உணர்வுகள் மேலோங்கி எதுவும் பேச விடக்கூடாது என்பதாலும் நான் சொல்வது ஆற்றாமை என்று விளங்கிக் கொள்ளப்பட்டால் கருத்து சென்றடையாது என்பதாலும் இந்த காலத்தை எடுத்துக் கொண்டேன். தேர்தலுக்கு முன் நான் நடிகர் விஜய் பற்றியும் அவரது ஆற்றலை பற்றியும் பற்றி என்ன கணித்து வைத்திருந்தேனோ, என்ன சொல்லி வந்தேனோ அதிலிருந்து அவர் கொஞ்சம் கூட மாறுபடவில்லை.
நான் சொன்னது அனைத்தும் சரி என்று அவர் நிரூபித்து வருகிறார். அவருடைய செயல்பாட்டில் அதிர்ச்சி அடைந்து வருபவர் அவருக்கு வாக்களித்தவர்தான். பலர் என்னை தொடர்பு கொண்டு புலம்பி வருகின்றனர். வெறும் கவர்ச்சி காரணமாக ஒரு நடிகர் மாநிலத்தின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இந்த மாநிலத்திற்கு நேர்ந்த அவமானம் ஆகும்.
நடிகன் என்றால் கேவலமா என்கிற சிறுபிள்ளைத்தனமான கேள்வியை கேட்கக் கூடாது. எந்த கூட்டம் அப்படி கேட்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது அமைச்சர்கள் என்கிற பெயரில் இருக்கிற சில கோமாளிகளை பார்க்கும்போது நடிகனுக்கு கட்அவுட் வைத்தவனும் பாலாபிஷேகம் செய்தவனும் கருப்பு சந்தையில் டிக்கெட் விற்றவனும் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆயிரங்களை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த பரிதாபத்துக்குரியவன்தான்.
பொழுதுபோக்கான சினிமாவை தன் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே பாவிக்கிறவனும் நடிகனை தலைவா தலைவா என கொண்டாடுகிற பேதையும் நடிகனின் காதலியை தலைவி தலைவி என்று அழைக்கிற தற்குறியும் இன்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் சிலர் அமைச்சராகவும் இருக்கிற அவல நிலையைப் பார்த்து வட மாநிலங்கள் சிரிக்கின்றன. இவர்கள் இன்று அந்த இடத்தில் அமர்ந்ததற்கு ஒரே காரணம் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டது தானே, வேறு என்ன? இவர்களுக்கா வாக்களித்தார்கள். கவர்ச்சி நாயகனுக்குதானே?
இத்தனை காலம் கட்டிக் காத்த பெருமையும் பேரும் ஒரே நாளில் சிதைந்து சில வெளிநாடுகளும் கேவலமாக பார்க்கும் நிலையும் வந்ததற்கு காரணம் தமிழ்நாட்டில் உள்ள 1.6 கோடி வாக்காளர்கள். இவருக்கு பின் நின்று தீவிரமாக ஆதரித்த ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் இவர் வெற்றியை எப்படி நக்கல் அடித்தார் என்பதை இதற்கு போதுமான ஆதாரம் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் கூறியிருக்கிறார்.





