தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திர நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் சிங்கம்புலி. சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் பேசிய நடிகர் சிங்கம்புலி கூறியதாவது, என்னை மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பைத்தியமா நடிக்க சொல்லிட்டாங்க. அப்போ பைத்தியமா நடிக்கிறதுக்கு என்ன ரெபஃரென்ஸ் இருக்குதுன்னு யோசிச்சோம்.
போர்ல 2 வகை உண்டு. ஒண்ணு வைக்கப்போர் இன்னொண்ணு அக்கப்போருன்னு மனோகரா படத்துல பைத்தியமா நடிச்ச காகா ராதாகிருஷ்ணன் ஒரு சீன்ல சொல்லியிருப்பார். சின்னதம்பியில் ஒருத்தர் கல்யாணம் என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பார். நம்ம என்னவா நடிக்க போறோம்? நமக்கு என்ன தெரியும் என்று எனக்கு ஒரே குழப்பம்தான்.
அப்போது நானும் மணிவண்ணன் சாரும் திண்டுக்கல் இருந்து காரில் ஒட்டன்சத்திரம் போயிட்டு இருக்கோம். அப்படி கார்ல போகும் போது எங்க கூட வந்த பையனோட அப்பா தான் காரை ஓட்டீட்டு வந்தார். அப்போ அந்த பையன் அப்பா நான் கார் ஓட்டறேம்பா என்றான். இப்போ அதுக்கெல்லாம் உனக்கு வயசு இல்லே. நான் சொல்றேன் அப்புறமா நீ கார் ஓட்டுன்னு அவர் சொல்லிட்டார்.
அதுக்கு அந்த பையன் அப்பா எப்போதான் என்கிட்ட காரை தருவே? எப்போ நான் கார் ஓட்டறதுன்னு அந்த பையன் கேட்டுக்கிட்டே வந்தான். பேசாம இருடா என்று சொல்லிட்டார். அந்த பையன் அப்போ திடீர்ன்னு அப்பா நீ செத்துப் போனா இந்த கார் எனக்கு தானப்பா என்று சொல்லிட்டான்.
அதை கேட்டதும் எனக்கும் மணிவண்ணன் சாருக்கும் தூக்கி போட்டுடுச்சு. என்னடா அப்பாவை காருக்காக சாக சொல்றான் என்று பார்த்த போது மணிவண்ணன் என்னை பார்த்து கண்ணடிச்சார். என்னப்பா சொல்றீங்க என்றவுடன் இதைத்தாண்டா நாம எடுத்துக்கறோம்டா என்றார். நீ செத்துப்போனா இந்த செருப்பு எனக்குத்தானே டயலாக் அங்கிருந்து வந்ததுதான்.
நீ செத்தா இந்த கார் எனக்குத்தானே நீ செத்தா இந்த சொத்து எனக்குத்தானே என்று பெத்த அப்பனை பார்த்து கேட்கறான் பாரு, அவன்தான்டா நிஜ பைத்தியக்காரன். இதை மட்டும் பிடிச்சுக்கடா என்று மணிவண்ணன் சார் ஐடியா கொடுத்தார். அதுதான் படத்தில் பெரிய அளவில் எனக்கு ரீச் ஆச்சு என்று நடிகர் சிங்கம்புலி கூறியிருக்கிறார்.





