தமிழ் சினிமாவை போன்றே மலையாள சினிமாவிலும் முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் வாரிசுகள் களமிறங்கி நடிகர்களாக சாதித்து வருகின்றனர். நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் இயக்குனர் பாசில் மகன் பகத் பாசில் போன்ற வாரிசு நடிகர்கள் தங்களது திறமையின் மூலம் மிகப்பெரிய இடத்தை சினிமாவில் தக்க வைத்து கொண்டுள்ளனர்.
தென்னிந்திய அளவில் வெற்றிகரமான பிஸியான ஹீரோ நடிகர்களாகவும் அவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். அதே வேளையில் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் உதவி இயக்குனராக சினிமாத்துறையில் தொழில் கற்றுக் கொண்டார். அதற்கு பின்னர் அவர் நடிகராக மாறி கிட்டத்தட்ட 4 படங்கள் வரை பிரணவ் நடித்தார்.
அவர் நடித்ததில் 3 படங்கள் பெரிய அளவில் ஹிட்டான படங்கள் தான் என்றாலும் அவர் ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த சமயத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா கிளம்பி சென்று விடுகிறார். வாரக்கணக்கில் மாதக்கணக்கில் அங்கு இயற்கையை ரசித்து நாட்களை செலவிடுகிறார்.
அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சினிமா துறையில் காத்திருக்கும் நிலையில் மகன் பிரணவின் இந்த போக்கு குறித்து சமீபத்தில் நடிகர் மோகன்லால் மனம்திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோது நடிகர் மோகன்லால் கூறியதாவது, குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைக்க நான் ஒருவன் இருப்பதே போதும் என்று நினைத்து விட்டார் போல இருக்கிறது என்று ஜாலியாக கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், பிரணவ் போல இளம்வயதில் இருக்கும்போது நானும் சினிமாவில் இருந்து விலகி இப்படி பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அது முடியாமல் போனது. இப்போது என்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக பிரணவ் தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே பூரண சம்மதம்தான். நமது பிள்ளைகளின் சந்தோஷமான வாழ்க்கையை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அவன் விரும்பியபடி அவன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டும். அதுதானே பெற்றோருக்கும் பெரிய சந்தோஷம் என்று நடிகர் மோகன்லால் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





