தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். நான் இந்தியா பாகிஸ்தான் சலீம் பிச்சைக்காரன் திமிர் புடிச்சவன் கொலைகாரன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் அவரே திரைப்படங்களை சொந்தமாக தயாரித்தும் அவர் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் நூறு சாமி என்ற படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு நூறு சாமி படத்தை டைரக்டர் சசி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த படங்களில் மிக முக்கியமான ஒரு படமாக பிச்சைக்காரன் இருந்தது.
அந்த படத்தில் இடம்பெற்ற நூறு சாமிகள் இருந்தாலும் என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அந்த பாடலின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த புதிய படத்திற்கு நூறு சாமி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு உணர்வுபூர்வமான கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் உருவான இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா அஜய் திஷான் லிஜோ மோல் ஜோஸ் கருணாஸ் காவ்யா அனில் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
படத்துக்கு பாலாஜி ஸ்ரீாம் இசையமைத்துள்ளார். வருகிற 19ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் படக்குழு தற்போது தீவிர பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் நடந்த நூறு சாமி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது, எனக்கு எளிமையான கிராமத்து வாழ்க்கை மிகவும் பிடிக்கும். இன்னும் 3 ஆண்டுகளுக்குள் பொள்ளாச்சி போன்ற ஒரு கிராமத்திற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளேன். ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ நான் ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் கிராம மக்கள் நகர வாழ்க்கையை பார்த்து ஏமாற வேண்டாம். நகரங்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.
கிராம வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கை. வேலை காரணமாக மட்டுமே நாங்கள் சென்னையில் இருக்கிறோம். இங்கு மால் போன்றவை இருக்கிறது என்று பெரிதாக நினைக்க வேண்டாம். அதில் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றார். திரைப்படத்துறையில் சம்பள கட்டுப்பாடு குறித்து பேசிய விஜய் ஆண்டனி தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்த விகிதாச்சார அடிப்படை சம்பள முறை நல்ல அணுகுமுறை. அந்த முறையில் சம்பளம் பெற்ற கதாநாயகன் நான் தான் என்றும் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.





