தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக இவரது நான் ஸ்டாப் பேச்சு வெகுவாக பலரை கவர்ந்தது. அதே போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக இவரது மூச்சுவிடாத பேச்சில் கிரிக்கெட் ரசிகர்களை அசத்தி வருகிறார் ஆர்ஜே பாலாஜி.
காமெடி ரோலில் நடித்த ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி படம் மூலம் நாயகனாக மாறினார். நவீனகால அரசியல்வாதியாக அவரது காமெடி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் ஒர்க் அவுட் ஆனது. முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்தார். தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார்.
தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து சத்யராஜ், ஊர்வசி நடித்த வீட்ல விசேஷம் படமும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படி தொடர்ந்து ஏறுமுகத்தில் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி.
இப்போது நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, லப்பர் பந்து நடிகை சுவாசிகா, நட்டி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா, திரிஷா இருவருமே வக்கீல் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படம் வெளியாகி, தியேட்டர்களில் பாசிடிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக கூறியதாவது, மறைந்த நடிகர் மயில்சாமி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர். அவர் யாரிடம் பணம் கேட்டு வாங்கினாலும் அதை கஷ்டப்படும் மக்களுக்குதான் கொடுத்து உதவுவார். ஒருமுறை நானும் அவரும் காரில் சென்றுக்கொண்டு இருந்தோம். அவரது கையில் இருந்த பேக்கில் 50 ஆயிரம் பணம் இருந்தது.
அப்போது ஒரு இடத்தில் ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போய் ஆளுக்கு 500 ரூபாய் என, பேக்கில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து விட்டு வந்துவிட்டார். நான் என்ன சார், எதுக்கு சார் இது என்று கேட்டதற்கு மயில்சாமி, அங்க பாருங்க, அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க என்று சிரித்தபடி சொன்னார். அப்புறம் நானும் அதுபோல் பையில் பணத்தை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்துக்கு மாறிவிட்டேன் என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.





