தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் பெருகி விட்டன. சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பல இடங்களில் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இந்த குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடி படை திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் சிங்கப்பெண் அதிரடி படைத் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மாலை சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது, ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
நம் வீட்டில் அம்மா அக்கா பாட்டி போல ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பும் மிக முக்கியம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவோம். பெண்களின் பாதுகாப்புக்கு போதை ஒழிப்பு முக்கியம். போதையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் தான் போதை பொருள் நடமாட்டம் தமிழகத்தில் பெருமளவில் பரவி விட்டது. போதை கலாசாரம் பெருகிப் போய்விட்டது. பெண்களை தொந்தரவு செய்தால் இனி சகித்துக் கொள்ள மாட்டேன். குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் இதில் நிரபராதிகளும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசார் அதிக கவனமாக செயல்பட வேண்டும். பெண்களுக்கான கண்ணியம் உச்சபட்ட முன்னுரிமை பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நாட்டில் முதலாவதாக ட்ரோன்கள் வாயிலாக ரோந்து நடைபெற இருக்கிறது.
பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில்தான் ஒரு அரசின் வெற்றி உள்ளது. தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் நம் சமூகம் மாறும். பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த சிங்கப் பெண் அதிரடி படைத் திட்டம் தொடங்க காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி என்று முதல்வர் விஜய் அந்த விழாவில் பேசியிருக்கிறார். இந்த விழாவில் முக்கிய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.





