தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை குறிப்பாக நாளைய தீர்ப்பு ரசிகன் தேவா விஷ்ணு போன்ற படங்கள் அவருக்கு பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தது. செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் விஜயகாந்த் தம்பியாக நடித்த விஜய்க்கு ஓரளவுக்கு தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் அறிமுகம் கிடைத்தது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் பூவே உனக்காக. இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் டைரக்ட் செய்து இருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சு அரவிந்த். இந்த படம் மாஸ் ஹிட் படமாக விஜய்க்கு அமைந்தது. ஒரு ஹீரோவுக்கான முழு அந்தஸ்தை இந்த படம் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து நடிகர் விஜயுடன் ஒன்ஸ்மோர் என்ற படத்திலும் அஞ்சு அரவிந்த் நடித்திருந்தார். மேலும் அருணாசலம் வானத்தை போல குருபார்வை ஆசைத்தம்பி வாஞ்சிநாதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் அஞ்சு அரவிந்த் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது சித்தி ராஜ் என்பவர் புற்றுநோயால் உயிரிழந்தார்.
தனது சித்தி மறைவு குறித்து நடிகை அஞ்சு அரவிந்த் கூறியதாவது, ஆரம்பகாலத்தில் இருந்தே என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் எனது சித்தி ராஜ் தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். எனக்கு நடன அரங்கேற்றம் செய்யும்போது புதிதாக உடை வாங்க வசதி இல்லாத நேரத்தில் அவரது பட்டுப்புடவையை எனக்கு கொடுத்து அதில் உடை தைத்து அணிந்துதான் எனது நடன அரங்கேற்றம் நடந்தது.
நான் சினிமாவில் நுழைவதற்கும் இப்போது பொருளாதார ரீதியாக தனித்து நிற்பதற்கும் எனது சித்தி தான் காரணம். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது உள்ளூரில் இருந்த டாக்டர் ஒருவரிடம் காட்டினோம். அப்போதெல்லாம் அவர் அது வெறும் வாயுத்தொல்லை என்று கூறி சாதாரண மருந்து மாத்திரைகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார். பலமுறை இதேபோல் அலட்சியமாக அந்த டாக்டர் சரியான சிகிச்சை அளித்ததால் நோயும் தீவிரமடைந்து விட்டது.
ஒரு கட்டத்தில் பெரிய மருத்துவமனைக்கு சென்று சித்திக்கு பரிசோதனை செய்தபோதுதான் அவருக்கு புற்றுநோய் 4ம் கட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. ஆரம்பத்திலேயே அந்த உள்ளூர் டாக்டர் ஒரு ஸ்கேன் செய்து பாருங்கள் என்று பரிந்துரை செய்திருந்தால் இன்று நான் என் சித்தியை இழந்திருக்க மாட்டேன். டாக்டர்கள் நோயாளிகளை இவ்வளவு அலட்சியமாக கையாளக்கூடாது. இப்படி கவனக்குறைவாக செயல்படக் கூடாது என்று அஞ்சு அரவிந்த் ஒரு நேர்காணலில் வருத்தப்பட்டுள்ளார்.





