தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சரவணன். அறிமுக நாயகனாக இளைஞராக சரவணன் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தாய்மனசு அபிராமி பொண்டாட்டி ராஜ்ஜியம் சந்தோசம் சூரியன் சந்திரன் பார்வதி என்னை பாரடி தம்பிதுரை என பல படங்களில் சரவணன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
அதன் பிறகு சினிமாவில் போதிய வாய்ப்புகள் இன்றி அவர் இருந்த நிலையில் 2007ம் ஆண்டில் வந்த இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் சித்தப்பு கேரக்டரில் கார்த்தியுடன் இணைந்து சரவணன் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஜெயிலர் அரண்மனை கோலமாவு கோகிலா கடைக்குட்டி சிங்கம் ராயன் மருத தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். ஒருமுறை விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் பங்கேற்றார். ஆனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பிக்பாஸ் அதிரடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் சரவணன் இப்போது வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது முதல் மனைவி சூரிய ஸ்ரீ மவுலிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் நடிகர் சரவணனுக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. அதனால் சரவணன் 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரே குடியிருப்பில் தனித்தனியாக நாங்கள் வசித்து வருகிறோம். எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
எனக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததால் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி சரவணன் ஆட்களை வைத்து அந்த கேமராவை அகற்றி விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து மவுலிவாக்கம் போலீசார் நடிகர் சரவணனிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் நடிகர் சரவணன், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள ஷெட்டுக்கு கேமரா ஒயர் இடையூறாக இருந்ததால் அதை அகற்றியதாகவும் தற்போது மீண்டும் பொருத்தி கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி போலீசில் புகார் அளித்தது அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





