புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் யாரும் தேர்தலின் போது பணம் கொடுத்து ஓட்டு வாங்கவில்லை. தேர்தல் காலத்தில் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்து அதன்மூலமாக மக்களிடம் இருந்து ஓட்டுகளை வாங்கும் பார்மூலாவை போட்டி போட்டுக்கொண்டு செய்தது அதிமுக, திமுக கட்சிகள்தான். அப்படி பணம் கொடுத்தும் இலவச திட்டங்களை அறிவித்தும் தான் கடந்த பல ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தது.
வறுமை நிலையில் வாழும் மக்கள் இதுபோன்ற இலவச திட்டங்களுக்காக தங்களது ஓட்டுகளை விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலத்துக்கு காரணம் இதுவரை ஆட்சி செய்த அதிமுக திமுக கட்சிகள்தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் திமுக, அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமம் தொகை 1000 ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி தந்து ஆட்சியை பிடித்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 2.5 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியான மகளிருக்கு என்று அந்த திட்டத்தில் திருத்தம் செய்து 1.31 கோடி பெண்களுக்கு மட்டும் மாதம் ரூ. 1000 வழங்கியது. இதனால் திட்டத்தில் மறுக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூழலில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கிய நேரத்தில், மகளிர் உரிமம் தொகை திட்டத்தில் பயனடைந்து வந்த 1.31 கோடி பெண்களுக்கு திடீரென ரூ. 5 ஆயிரம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
தேர்தல் வருவதால் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமை தொகை என்றும் 2 மாதம் கோடை கால ஊக்கத் தொகை என்றும் திமுக தரப்பில் அன்றைய முதல்வர் ஸ்டாலின் கூறினார். இது அந்த திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்து வந்த பெண்களை குஷிப்படுத்தியது. ஆனால் ஏற்கனவே ஏமாற்றத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் கிடைக்காத கடுப்பில் இருந்த பெண்கள், இதனால் மேலும் ஆத்திரமடைந்தனர்.இதுதான் தவெகவுக்கு பெரும்பாலான பெண்கள் ஓட்டுப் போட காரணமாக மாறியது.
இது மகளிர் உரிமத்தொகை கிடைக்காத பெண்களுக்கு வெறுப்பை கோபத்தை ஏற்படுத்தும் என்கிற இந்த சிம்பிள் லாஜிக்கை திமுக தலைமையிடம் சொல்ல எந்த அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. ஆனால் தோல்விக்கு பிறகு இப்போதுதான் இது திமுக தலைமைக்கு தெரிய வந்து புலம்புகிறது. அதே போல் தவெக அரசு, தற்போதைய நிதி நிலமை சரியான பிறகுதான் மகளிக்கு ரூ. 2500 வழங்கும் என்று அமைச்சர் அருண்ராஜ் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே தமிழக மக்களின் தனிநபர் கடன் 1.28 லட்சம் ரூபாய் என்கிற நிலையில், இவர்களது நிதி நிலமை எப்போது சரியாகி, எப்போது அந்த பணம் கைக்கு வரும் என்று பெண்கள் புலம்ப துவங்கியுள்ளார். அன்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக மாறிய இந்த மகளிர் உரிமத் தொகை விவகாரம், மிக விரைவில் முதல்வர் விஜய்க்கும் எதிராக மாறி விடும். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்கிற சிக்கலான ஒரு சூழல் உருவாகி உள்ளது.





