சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். சுப்ரமணியபுரம் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து நாடோடிகள் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படமும் சசிக்குமாருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் பல படங்களில் ஹீரோவாக நடித்து ஜெயித்தார். பிறகு ஹீரோவாக இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் களத்தில் இறங்கி பலத்த நஷ்டத்தை சந்தித்தார். எனினும் தொடர்ந்து நல்ல கதைகளை கேரக்டர்களை தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, தவெக கட்சியில் இணைவீர்களா என்று பலரும் கேட்கின்றனர். நமக்கு அரசியல் வராது. அரசியல் நமக்கு தெரியாது. எனக்கு நடிப்பு டைரக்சன் மட்டும்தான் தெரிந்த விஷயம். விஜய் சாரை வைத்து ஒரு ஹிஸ்டாரிக்கல் கதை படம் பண்ணனும் என்று நினைச்சேன்.
இதை அவர்கிட்டேயே நான் சொன்னேன். ஆனால் அவர் மீது எனக்கு வருத்தம். அந்த படம் அவரை வைத்து பண்ண முடியலையேன்னு ஒரு வருத்தம் இருக்குது. அவ்வளவுதான். மத்தபடி சந்தோஷம். அவர் சிஎம் ஆனது சந்தோஷம்தான். ஆனால் ஒரு டைரக்டராக அவரது படம் பண்ண முடியலையே அப்படீங்கற வருத்தம் மட்டும் எனக்கு இருந்துட்டு இருக்குது.
அந்த ஹிஸ்டாரிக்கல் கதையை அவர்கிட்ட சொன்னேன். அவருக்கு ரொம்பவும் கதை பிடித்திருந்தது. படத்தை தயாரிக்க அவரே புரடியூசரும் ரெடி பண்ணி கொடுத்தார். எழுத்தாளர் சு வெங்கடேசன் தான் அந்த கதையை சொன்னார். கதையை சொன்னவுடனே அவரை விஜய் கைபிடித்து குலுக்கி பாராட்டினார்.
லொக்கேஷன் எல்லாம் போய் பார்த்துட்டு வந்துட்டேன். ஆனால அந்த படம் பண்ண முடியலே. ஏன்னா அப்போ அந்த பட்ஜெட் ரொம்ப பெருசா இருந்தது. சரி பின்னால பண்ணுவோம் என்று பேசியிருந்தோம். ஆனா அது பண்ண முடியாமலேயே போய் விட்டது என்று அந்த நேர்காணலில் இயக்குனர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.





