நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக உச்ச நட்சத்திர நடிகராக வலம் வந்தவர். குறிப்பாக 1980 90களில் விஜயகாந்த் படங்கள் என்றாலே தியேட்டர்களில் திருவிழா கூட்டமாக இருக்கும். ரஜினி கமலை விட அந்த காலகட்டத்தில் விஜயகாந்துக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்ப சென்டிமென்ட் படங்களில் நடித்து பெண்களை கவர்ந்தவர் விஜயகாந்த்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் ஒரு நேர்காணலில் பேசிய போது கூறியதாவது, இங்கிலீஸ்ல இன்சல்ட்டுன்னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கி கொண்டவர்களில் நானும் ஒருவன். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோகிணி லாட்ஜ்ல 20ம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க.
கே பாக்யராஜ் ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜூலதான் இருந்தாங்க. முதல்ல டைரக்டர் எம்.ஏ.காஜா, இனிக்கும் இளமை படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்களில் என் நிஜப் பெயரான விஜயராஜ் தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்ன்னு எனக்கு பேர் வெச்சார்.
முதல் நாள் ஷூட்டிங் அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமா உலகத்தில புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர் மீரா ராதிகா எல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள் நடக்கும். நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.
ஆனால்‘இனிக்கும் இளமை படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்துக்கொண்டு விடாமல் பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்ன்னு கிண்டலா சொல்லுவாங்க.
அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு என்று அந்த நேர்காணலில் நடிகர் விஜயகாந்த் கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை தனது ஆரம்ப கால சினிமா பயணத்தில் அனுபவித்த நடிகர் விஜயகாந்த் பின்னாளில் பலருக்கு சினிமாவில் வாழ்வளித்த ஒரு நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





