கரூரில் இன்று மதியம் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அப்போது முதல்வர் விஜய் பேசியதாவது, கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது தெரியுமா? கரூர் சம்பவத்தின் போது காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுத்ததா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.
எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவன் நான். என்னை ஏளனமாக பேசுகிறார்கள். ஓடி ஒளிந்து விட்டார் என என்னை பார்த்து பேசினார்கள். வாய் இருப்பது என்பதற்காக என்ன வேணும் என்றாலும் பேசுவீர்களா? ஒவ்வொரு துறையிலும் தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் சேர்ந்து கொண்டு பார்ட்டி பண்ட் வாங்கி உள்ளனர்.
பார்ட்டி பண்ட் என்றுதான் சட்டசபையில் சொன்னேன். எந்த கட்சி என்று கூட சொல்லவில்லை. உடனே வெளியே சென்றுவிட்டார். சென்னையில் பாலம் கட்ட வழக்கமான செலவை இரண்டு மடங்கு செலவில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதையெல்லாம் தோண்டி எடுத்து ரத்து செய்தோம். இன்னும் எத்தனை வரும் என்று தெரியவில்லை. விஜய் ஒவ்வொரு கதையாக வெளியே எடுத்து விடுவார் போல என்று கதறல் கதறல் என திரும்பிய பக்கமெல்லாம் கதறல் சத்தம்தான்.
கடந்த 50 நாட்களாக அரசு அலுவலகங்களில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. ஒரு பைசா கூட ஊழல் இல்லை. அரசு அலுவலகங்களில் வேலைகள் விரைவாக நடப்பதாக மக்கள் பெருமையாக பேசுகின்றனர். தாய்மாமன் சீர் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்க உள்ளது. தீய சக்தி போல் ரீல் தாய்மாமன் எல்லாம் இல்லை. நான் ரியல் தாய் மாமன்.
தீய சக்தி நிர்வாகம் பற்றிய வெள்ளை அறிக்கையை அண்மையில் வெளியிட்டோம். நிதித்துறை சார்ந்த குறித்த வெள்ளை அறிக்கையை பற்றி சுருக்கமாக ஒரு உதாரணம் சொல்கிறேன். ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உள்ளனர். ஆனால் தண்ணீர் எங்கே போனது என்றே தெரியவில்லை. நான் பேசவில்லை என்றால் வாயைத் திறங்க சி எம் என்று பேட்ஜ் குத்திக்கொண்டு வருகிறார்கள்.
நான் பேசினால் விஜய்க்கு அரசியல் பேச தெரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால் நான் ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டனர். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அதிமுகவும் திமுகவும் நிரூபிக்க முடியுமா? இடைத்தேர்தலில் நிரூபியுங்கள். பிறகு பேசுங்கள். பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும் என்பதே நமது அரசியல் என்று முதலமைச்சர் விஜய் அந்தக் கூட்டத்தில் இன்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.





