தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. கரூர் சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு நேற்று கரூருக்கு முதல்வர் விஜய் சென்றார்.
அப்போது அங்கு நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார். கரூரில் நடந்த சம்பவத்திற்கு யார் காரணம்? அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியது யார்? என்னை நம்ப வைத்து கூட்டத்துக்குள் அழைத்து வந்த அன்றைய போலீசாரை நான் மிகவும் நம்பினேன்.
ஆனால் பின்னால்தான் இதெல்லாம் நாடகம் என்று எனக்குத் தெரிந்தது. கரூர் போலீசார் நினைத்திருந்தால் இந்த கூட்டத்தையே ரத்து செய்து இருக்கலாம். அல்லது எதிர்பார்த்ததை விட அதிகளவில் மக்கள் கூட்டம் வந்திருக்கிறது என்ற தகவலை சொல்லி இருக்கலாம். ஆனால் போலீசார் எதுவுமே செய்யவில்லை. கடைசியில் என் மீது பழி போட்டு விட்டார்கள்.
இப்போது ஊழலற்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அரசு அலுவலகங்களில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கேட்காமல் அதிகாரிகள் வேலை செய்வதாக பொதுமக்கள் பெருமைப்படுகிறார்கள். அப்படி யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் இது விஜய் ஆட்சி. எங்களுடைய பிள்ளை ஆட்சி நடக்கிறது என்று சொல்லுங்கள். நான் இருக்கிறேன் உங்களோடு என்று முதல்வர் விஜய் பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் விஜயின் நேற்றைய கரூர் பேச்சு குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன். எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு. ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்கு தரும் மிகச் சிறந்த பாதுகாப்பு இதுதான்.
ஆனால் இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும். லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான். இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்து விடும். ஒளி பிறக்கட்டும். ஊழலற்ற தமிழ்நாடு என இயக்குனர் சீனு ராமசாமி செய்த எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





