கடந்த 6 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்த நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் 6 நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் இப்போது இந்த படம் திரைக்கு வருகிறது. வழக்கமான விஜய் படம் போல இந்த படமும் வசூலை அள்ளுமா அல்லது மற்ற படங்களைப் போல சாதாரண வசூலை கொடுக்குமா என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் சந்தேகமும் நிலவுகிறது.
நடிகர் விஜய் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு ரிலீசாக வேண்டிய இந்த படம் அவர் தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு 2 மாதங்கள் கழித்து வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் வருகிற 23ம் தேதி இந்த படம் சுமார் 8000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் நேற்று காலை முதல் 6 மணி சிறப்புக் கட்சிக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. அதிகபட்சமாக 1800 ரூபாய் வரை ஆன்லைன் தளங்களிலேயே டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விஜய் படம் என்றாலே தமிழ்நாட்டிலும் டிக்கெட் கட்டணங்களை கணிசமாக உயர்த்தி விடுவது தியேட்டர்களில் வழக்கம். ஆனால் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு முன்புதான் அப்படி கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டன.
இப்போது டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் விற்பனை செய்தால் அதுவும் முறைகேடு ஊழல் என்கிற அவப்பெயரைத்தான் முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தும். தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக தனது ஆட்சி கடும் நடவடிக்கையை எடுக்கும் என்று முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார்.
அதனால் ஜனநாயகன் படம் வெளியாக உள்ள தியேட்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. எந்த காரணத்தை கொண்டும் தியேட்டர்களில் ஜனநாயகன்படத்துக்கு டிக்கெட் கட்டணத்தை அதிகரித்து விற்கக் கூடாது. மேலும் ஏ சான்றிதழ் படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் குழந்தைகள் யாரும் தியேட்டரில் படம் பார்க்க அனுமதிக்க கூடாது என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அனைவரும் ஜனநாயகன் படம் திரையிடலில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அவற்றை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்க தயாராக உள்ளனர். அதனால் தங்களது கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்தவிதமான கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என படத்தின் தயாரிப்பாளர் மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





