இந்திய மக்களால் மறக்க முடியாத பெருமைமிகு ஒரு காவியமாக போற்றப்படுவது இராமாயணம். இராமர் சீதாதேவி இராவணன் கேரக்டர்கள் மட்டுமின்றி இராமாயண இதிகாசத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே ஒவ்வொரு விதத்தில் மிக சிறப்பு வாய்ந்த தெய்வாம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஏற்கனவே இராமாயணம் சார்ந்த கதைகள் மேடை நாடகங்களாக டிவி சீரியல்களாக திரைப்படங்களாக வந்திருக்கின்றன.
எனினும் இப்போது 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் பான் வோர்ல்டு படமாக 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் பிரமோசன் பணிகளுக்காக மட்டுமே ரூ. 375 கோடி வரை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இராமாயணா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இதில் இராம பிரான் கேரக்டரில் ரன்பீர் கபூர் சீதாதேவி கேரக்டரில் சாய்பல்லவி நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இராவணன் கேரக்டரில் கேஜிஎஃப் நாயகன் யஷ் நடித்திருக்கிறார். 2 பாகங்களாக உருவாகும் இராமாயணா படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையே இராமாயணா படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதீத கவனம் பெற்று இருக்கிறது.
இந்நிலையில் இராவணன் கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகர் யஷ் பேசியிருக்கிறார். இதுகுறித்து யஷ் கூறியதாவது, சிறு வயதில் இருந்தே நாம் இராமாயணம் கதையை கேட்டே வளர்ந்தவர்கள். நான் முதலில் கேட்ட கதையும் அதுதான். என் தாத்தா இந்த கதைகளை எனக்குச் சொல்லுவார். அதனால் இராவணன் பற்றிய ஒரு கற்பனை நம் மனதில் ஏற்கனவே இருக்கும். மேலும் பலரும் அந்த கதாபாத்திரத்தை பல்வேறு விதங்களில் சித்தரித்திருப்பதையும் பாத்திருக்கிறோம்.
ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி முன்பே யாருக்கும் எந்த கற்பனையும் இல்லை என்றால் நீங்கள் எப்படி நடித்தாலும் அதுவே அந்த கதாபாத்திரத்தின் அடையாளமாக மாறிவிடும். ஆனால் இராவணன் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான கதாபாத்திரத்தில் மக்கள் ஏற்கனவே ஒரு உருவத்தை மனதில் வைத்திருப்பதால் ஒரு நடிகராக அது கூடுதல் சவாலை ஏற்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக என் இயக்குனரும் எழுத்தாளர்களும் அந்த கதாபாத்திரத்தை வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்கான முழு சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். அதனால் இராவணனாக புதிய விதத்தில் என்னால் நடிக்க முடிந்தது. அதை ரசிகர்களும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகர் யஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்





