பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக உருவாகிறது. கடந்த 1916ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் எம் எஸ் சுப்புலட்சுமி. அவர் தனது 10வது வயதில் எச்எம்வி நிறுவனத்திற்காக பாடல் பாடி சாதனை படைத்தார். தொடர்ந்து சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
எம்எஸ் சுப்புலட்சுமி நடித்த முதல் படம் சேவாசதன். அதன்பிறகு நான்கு படங்களில் அவர் நடித்தார். அதில் அவர் அதிகமாக ரசிகர்களிடம் பிரபலமான படம் மீரா. கர்நாடக இசை ராணியாக கோலோச்சி வந்த எம்எஸ் சுப்புலட்சுமி பெறாத பட்டங்களோ பரிசுகளோ கிடையாது. அந்த அளவுக்கு நாட்டின் உயர்ந்த பரிசுகளையும் பட்டங்களையும் அவர் பெற்றிருக்கிறார்.
கடந்த 1954ம் ஆண்டில் பத்மபூஷன் விருது பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை கடந்த 1968ம் ஆண்டில் பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவர்தான். கடந்த 1998ம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றார். இவர் கடந்த 2004ம் ஆண்டில் தனது 88 வயதில் எம் எஸ் சுப்புலட்சுமி மறைந்தார்.
இந்த நிலையில் எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஜெர்சி கிங்டம் போன்ற திரைப்படங்களை இயக்கிய கௌதம் தின்னனூரி என்பவர் டைரக்ட் செய்ய உள்ளார். அல்லு அரவிந்த் பன்னிவாசு ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில் எம்எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா எம் எஸ் சுப்புலட்சுமி கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்ககையை மையமாகக் கொண்டு உருவாகும் எம் எஸ் எ லேகசி ஆன் ஸ்கிரீன் என்ற பான் இந்தியா படத்தில் எம்எஸ் சுப்புலட்சுமி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா எம் எஸ் சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த படத்தின் தொடக்க விழா நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.





