நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராதா சத்யராஜ் வடிவுக்கரசி தீபக் ரீரஞ்சனி சுதா ஜனகராஜ் வீராசாமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1985ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் முதல் மரியாதை. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த படமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, முதல் மரியாதை படப்பிடிப்பு மைசூரில் நடந்து வந்தது. அதில் சிவாஜியின் சொந்தக்கார பையனும் செருப்பு தைக்கும் செங்கோடன் மகளும் காதலித்து ஊரை விட்டே பரிசலில் தப்பித்து போவது போன்ற காட்சியை அதிகாலை 4 மணிக்கு படமாக்க இயக்குனர் பாரதிராஜா திட்டமிட்டார்.
அதற்காக இரவு 2 மணியில் இருந்தே படக்குழுவினர் அந்த இடத்தில் பணிகளை துவக்கி விட்டனர். பாரதிராஜாவும் அந்த காட்சியை படமாக்க வந்து விட்டார். ஆனால் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய ராதாவும் வரவில்லை. சிவாஜி கணேசனும் வரவில்லை. நேரமும் போய்க்கொண்டே இருந்தது. விடிவதற்குள் அந்த காட்சியை எடுக்க வேண்டும்.
இதனால் பாரதிராஜா டென்சன் ஆகி விட்டார். காலை 5 மணியளவில்தான் ராதா கார் அங்கு வந்தது. அருகில் வந்த ராதாவை பார்த்தவுடன் பாரதிராஜா, கண்டபடி திட்ட துவங்கி விட்டார். 10 நிமிடங்களாக திட்டிக்கொண்டே இருக்கிறார். ராதா அமைதியாக நிற்கிறார். அப்போது ராதா காருக்கு பின்னால் இன்னொரு காரில் சிவாஜி கணேசன் வந்ததை பாரதிராஜா கவனிக்கவில்லை.
அப்போது அங்கு வந்த சிவாஜி கணேசன், எங்களை என்னப்பா பண்ண சொல்றே? நாங்க தங்கியிருந்த ஓட்டல் ரூம்ல தண்ணியே வரலே. நாங்களும் இவ்வளவு நேரமா வெயிட் பண்ணி குளிச்சிட்டு இப்போ தான் கௌம்பி வர்றோம். எங்க மேல தப்பு இல்லே. தண்ணீ வராததற்கு நாங்க என்ன பண்றது என்று பேச பாரதிராஜா சட்டென அமைதியாகி விட்டார்.
அதன்பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அந்த இளசுகளின் காதலை ஏற்றுக்கொள்ள சிவாஜியிடம் ராதா பேசும் காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது துவங்கி அன்று இரவு 3 மணி வரை தொடர்ந்து சிவாஜி கணேசன் அன்றைய படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து கொடுத்தார் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.





