தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த நடிகையாக பெயர் பெற்றவர் சரிதா. மௌன கீதங்கள் நெற்றிக்கண் மலையூர் மம்பட்டியான் புதுக்கவிதை தண்ணீர் தண்ணீர் அச்சமில்லை அச்சமில்லை மங்கை ஒரு கங்கை வண்டிச்சக்கரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பிரண்ட்ஸ் மாவீரன் ஜூலி கணபதி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகை சரிதா நடிகை மட்டுமல்ல, சிறந்த பின்னணி குரல் கலைஞர். இன்றைய நடிகைகள் பலருக்கும் அவர் டப்பிங் வாய்ஸ் பேசியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சரிதா அம்மாவாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் சரிதா மாதிரி நடிக்க வேண்டும் என்று சொல்லும் இளம் நடிகைகள் பலர் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 1987ம் ஆண்டில் சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் வேதம் புதிது. பாரதிராஜா இயக்கத்தில் இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சரிதா கூறியதாவது, பாரதிராஜா கதை சொல்லும் போது எனக்கு 18 வயசுதான் இருக்கும். அந்த நேரத்துல எனக்கு வயசான கேரக்டர் கொடுத்தார்.
ஆனால் அவர் படத்துல நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கொஞ்ச நாள் யோசித்து பார்த்துட்டு ஓகேன்னு சொல்லிட்டேன். படத்துல என்னோட பொண்ணு கதாபாத்திரம் யார் பண்றாங்கன்னு கேட்டேன். ஒரு 15 வயசு பொண் தேடீட்டு இருக்கேன்னு அவர் சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அங்கே படப்பிடிப்புத் தளத்தில் போய் பார்த்தால் அமலா இருக்காங்க.
நான் அப்படியே அதிர்ந்து போயிட்டேன். நான் ஒரு முறை ஒரு படத்துக்கு ஓகே சொல்லிட்டால் அதிலிருந்து விலக மாட்டேன். அமலாவை விட பெரிய பொண்ணா தெரியணும்ன்னு என் கன்னத்துல டிஸ்யூ பேப்பர் எல்லாம் வைத்து ஒட்டி மேக்கப் பண்ணினாங்க. எப்படியோ அந்த படத்தை நடிச்சு கொடுத்துட்டேன். எனக்கு அந்த நேரத்துல என்னையே எனக்கு பிடிக்கல. ரொம்பவும் மன உளைச்சலோடு தான் அந்த படத்தில் நடித்தேன். அவங்க முன்ன சொன்ன மாதிரி எதுவுமே பண்ணல.
எனக்கு இதையெல்லாம் முன்னாடியே சொல்லி நான் ஓகே சொன்னா பரவாயில்ல. முன்னாடி எதுவுமே சொல்லாம இதை பண்ணதால எனக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. எனக்கு அந்த படத்தில் நடித்த அனுபவமே நல்லாவே இருந்தது. இருந்தும் ஏமாற்றம் தான். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பார்த்துட்டு என் கையை பிடித்து அழுதார் பாரதிராஜா சார். ஊர்ல அம்மா பேசுற மாதிரி இருக்குன்னு சொன்னார். அந்த படத்தை முடித்து படம் முதல் காட்சி பார்த்தோம். அதன் பிறகு எனக்கு கொடுத்த சம்பளத்தை நான் திருப்பிக் கொடுத்துட்டேன். நான் மனசு வெச்சு பண்ணாத படம்னு சொல்லி சம்பளத்தை திருப்பி கொடுத்துட்டு வந்துட்டேன் என்று நடிகை சரிதா கூறியிருக்கிறார்.





