தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக இருந்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெருமைக்கும் உரியவர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.
அவர் 25 திரைப்படங்களை இயக்கி அவரே பெரும்பாலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும் கே பாக்யராஜ் நடித்திருக்கிறார். இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய படங்களில் முந்தானை முடிச்சு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். இந்த படத்தில் ஹீரோவாக பள்ளிக்கூட ஆசிரியர் கேரக்டரில் கே பாக்யராஜ் நடித்திருப்பார்.
இந்த படத்தில் தான் மலையாள நடிகை ஊர்வசி தமிழில் அறிமுகமானார். இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. சித்தி கொடுமையை சொல்லும் ஒரு கதையாகவ இது இருந்தது. துறுதுறுப்பான பெண் கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடித்திருந்தார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தில் கிளைமாக்ஸ் காட்சி குறித்த ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார் இதுகுறித்து இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, இந்த படத்துல என்கிட்ட அசிஸ்டென்டா ஜிஎம் குமார் இருந்தார். படத்துல பர்ஸ்ட் ஆஃப்ல நான் ஒரு சீன்ல இந்த டயலாக்கை வெச்சிருந்தேன்.
அதுல என்னய்யா என்னை நீ எப்பவும் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்கறே? எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் இந்த குழந்தையை நான் பார்த்துக்க மாட்டேன்னு தானே நீ இப்படி சொல்லிட்டு இருக்கறே? வேண்டாம்யா எனக்கு குழந்தையே வேண்டாம். நான் கர்ப்பத்தடை பண்ணிக்கிறேன்னு ஊர்வசி டயலாக் பேசற மாதிரி சீன் வெச்சிருந்தேன்.
அப்போ ஜிஎம் குமார் எந்த ரியாக்ஷனும் காட்டலே. அப்போ என்னய்யா டயலாக் பிடிக்கலையான்னு கேட்டேன். அப்போ என்கிட்ட அவர் சொன்னது, சார் ஒரு பொண்ணு இதுக்கு மேல என்ன தியாகத்தை பண்ண முடியும்? இது கிளைமாக்ஸ் மாதிரி இருக்கு. நீங்க இதை ஒரு டயலாக்கா சொல்லிட்டு இருக்கீங்களே என்றார். அதுக்கு அப்புறம்தான் படத்தோட கிளைமாக்ஸை அப்படி மாத்தி அதற்கேற்றவாறு படத்தை கொண்டு போனேன் என்று இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.





