தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். சிவாஜி கெய்ட்வாட் என்ற அவரது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றியவர் இயக்குனர் கே பாலசந்தர். கடந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் தனது 50 ஆண்டு கால பொன்விழா பயணத்தை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இப்போதும் 75 வயதிலும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஜினியின் நீண்டகால நண்பர் கமல்ஹாசனே சொந்தமாக தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் ரஜினிகாந்த் மிக விரைவில் கவர்னராக பதவியேற்க உள்ளார். தமிழ்நாடு அல்லது கேரளம் என 2 மாநிலங்களில் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு அவரை கவர்னராக நியமிக்க பாஜக அரசு தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக கவர்னராக இருந்த ஆர்என் ரவி மேற்கு வங்கம் மாநிலத்துக்கு கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு சென்ற நிலையில் கேரளம் மாநிலத்தின் கவர்னர் அர்லேக்கர் தான் தற்போது தமிழ்நாடு கவர்னராக பொறுப்பு வகிக்கிறார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற அமைச்சரவையில் அவர்தான் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு அல்லது கேரளம் மாநிலத்தின் கவர்னராக விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. விஜய் முதல்வராக உள்ள நிலையில் ரஜினிகாந்த் கவர்னராக தமிழ்நாட்டில் இருந்தால் தமிழ்நாட்டு அரசியல் களம் எப்படி இருக்கும் என்பது இப்போது பரபரப்பாக பேசத் துவங்கி விட்டனர்.
நடிகர் விஜய் முதல்வராகி விட்டார். ரஜினியின் முன்னாள் மருமகன் நடிகர் தனுஷ் ஏற்கனவே கட்சி ஆரம்பிக்கும் முயற்சிகளை துவங்கி விட்டார். இப்போது ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் கவர்னர் என்றால் தமிழக மக்களுக்கும் ஊடகங்களுக்கும் விறுவிறுப்பான அரசியல் காட்சிகளுக்கு குறை இருக்காது. ஆனால் இது உண்மையா, உருட்டா? வேண்டும் என்றே விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.





