விளையாட்டு வினையாகி விடும் என்ற பழமொழியை இன்னும் சிலர் சொல்வது வழக்கமாக உள்ளது. அதாவது பின்விளைவுகளை யோசிக்காமல் விளையாட்டாக ஏதாவது செய்யப் போக அதுவே பின்னாளில் பெரிய அளவில் சிக்கலை பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை தான் அனுபவசாலிகள் இந்த பொன்மொழி மூலம் அறிவுறுத்துகின்றனர். அதுதான் சமீபத்தில் நடிகர் சியான் விக்ரம் விவகாரத்தில் நடந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிய வகை லார் கிப்பன் குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அரிய வகை குரங்கு ஆன அது சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? அந்த குரங்கை வீட்டில் வளர்க்க அனுமதி பெறப்பட்டதா? என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் கேள்வியாக எழுந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அந்த வீடியோவை நடிகர் விக்ரம் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். இதையடுத்து வனத்துறை இந்த குரங்கு வீடியோ விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டுக்கு அந்த குரங்கு கொண்டுவரப்பட்டது என்பது தெரிய வந்ததும்.
மணிப்பூரை சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் கடந்த 2020ம் ஆண்டில் தன்னிடம் 8 லார் கிப்பான் அரிய வகை குரங்குகள் இருந்ததாகவும் அவற்றின் பூர்வீகம் மலேசியா என்றும் தெரிவித்த தகவல் ஆவணங்களின் மூலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவரிடம் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவர் 3 லார் கிப்பான் குரங்குகளை கடந்து ஜூன் 5ம் தேதி தத்தெடுப்பு முறையில் வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் நடிகர் விக்ரமின் உறவினர் ரங்கநாதன் என்பவருக்கு அந்த குரங்கு வளர்ப்பு பிராணியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விக்ரம் பதிவிட்ட வீடியோவில் அவருடன் இருக்கும் குரங்குக்கு 2 அல்லது 3 வயது இருக்கலாம். அந்த குரங்கு லைகுராம் சிங்கிடமிருந்து வாங்கியதாக இருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் அரிய வகை லார் கிப்பான் குரங்கு விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் விக்ரமுக்கும் குரங்கு விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆவணங்களை வைத்திருந்த போதும் அதை முறையாக பதிவு செய்யாமல் இருந்த பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





