நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கலந்துக்கொண்டு பேசினார். அடுத்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்ற கருத்தை தெரிவித்தார்.
கமல்ஹாசன் சொன்ன இந்த கருத்து இப்போது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தங்களது கன்னட மொழி குறித்து குறைவாக மதிப்பிட்டு பேசிய நடிகர் கமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அங்குள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள தக்லைஃப் படத்தின் விளம்பர போஸ்டர்களை கிழித்தும், விளம்பர பேனர்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பாஜக தலைவர் எடியூரப்பா போன்றவர்களும் கமலுக்கு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா கன்னட வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னட மொழி குறித்து கமல் பேசியது சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன். கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடித்த தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம். அந்த படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதில் நடிகர் கமல்ஹாசன் தெளிவாக உள்ளார். கேரளாவில் நடந்த தக்லைஃப் பட விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கூறுகையில், என் கருத்தை எனது அருகில் இருந்து பார்த்தால் சரியாக தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாக தோன்றும். அன்பு மிகுதியால் நான் அப்படி பேசினேன். இந்த விஷயத்தில் அவர்கள் குழம்பி உள்ளனர். மொழி பற்றி வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். மொழிகள் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்றும் கூறிவிட்டார்.
இந்நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியிருப்பதாவது, எப்போதும் கன்னட மொழி மீது காதல் கொண்டவராக இருக்க வேண்டும். சர்ச்சை எழும் போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும். நட்சத்திர படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதியவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள் என்று நடிகர் கமலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தவர்களுக்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் நடிகர் கமலுக்கு கன்னட முன்னணி நடிகர் ஆதரவு தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.





