தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கில்லி குருவி போன்ற சில படங்களில் துணை நடிகர்களில் ஒருவராக நடித்தவர் விமல். பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனும் விமலும் இணைந்து நடித்திருந்தனர். இந்த 2 படங்களும் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து நடிகர் விமல் நடித்த களவாணி படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் ஓவியா நாயகியாக நடித்திருந்தார். இளவரசு சரண்யா பொன்வண்ணன் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் விமலுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஆனால் களவாணி 2 படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
களவாணி படத்தை தொடர்ந்து தேசிங்கு ராஜா மன்னர் வகையறா கலகலப்பு வாகை சூடவா மஞ்சப்பை ஜன்னல் ஓரம் புலிவால் கன்னிராசி தூங்காநகரம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என பல படங்களில் நடித்தவர் விமல். மன்னர் வகையறா என்ற படத்தை அவரே தயாரித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பன்னாங்கொம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் விமல். இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது பன்னாங்கொம்பு கிராமத்துக்கு நடிகர் விமல் வந்திருக்கிறார்.
அப்போது அங்கு கிராம சந்தை நடந்துள்ளது. காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த ஒரு காய்கறி கடையில் அமர்ந்து அவர் வியாபாரம் செய்ய துவங்கி விட்டார். டேய் தம்பி இங்க வாடா என்று அங்கு இருந்தவர்களை கூவி கூவி அழைத்து காய்கறி வியாபாரத்தில் நடிகர் விமல் ஈடுபட்டார்.
அங்கு நடிகர் விமல் காய்கறி வியாபாரம் செய்வதை பார்த்து அங்கு மக்கள் கூட்டம் வேடிக்கை பார்க்க திரண்டு விட்டது. பின்னர் சிறிது நேரம் காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல், அங்கிருந்த சில காய்கறி வியாபாரிகளுக்கு ரூ. 500 என பணம் தந்துவிட்டு பிறகு அங்கிருந்து காரில் ஏறிச் சென்றுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





